நியூயார்க் பாரில் இருந்தாரா ஸ்டீவ் ஸ்மித்.. உண்மை என்ன தெரியுமா..
நியூயார்க்: ஸ்டீவ் ஸ்மித் நியூயார்க் நகரில் தனிமையில் பாரில் சோகமாக அமர்ந்து பீர் அருந்திக் கொண்டிருப்பதாக நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. கிட்டத்தட்ட பல நாடுகளின் முக்கிய செய்தி நிறுவனங்கள் கூட உண்மை நிலை தெரியாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. எதிர்மறையான அந்த செய்தியின் உண்மைப் பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது.
நேற்று ஸ்மித் பற்றி, “ஏமாற்றமுடன் ஸ்மித், நியூயார்க்கில் ஒரு சோகமான காட்சி” என தலைப்பிட்டு, ஸ்மித் பாரில் அமர்ந்து பீர் அருந்துவது போன்ற படங்களுடன் செய்தி வெளியானது. வேகமாக இணையத்தில் பரவிய இந்த செய்தி பல அச்சு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களிலும் வெளியானது.
சில பத்திரிகைகள், இதை மேலும் பெரிதாக்கி ஸ்டீவ் ஸ்மித்தை திருமணம் செய்யவிருக்கும் டானி வில்லிஸ், இத்தாலியில் தன் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், ஸ்மித் நியூயார்க்கில் சோகமாக அமர்ந்து மது அருந்தினார் என டானி வில்லிஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடுமுறை புகைப்படங்களோடு, ஸ்மித் மது அருந்தும் படத்தையும் இணைத்து செய்திகள் வெளியிட்டன.
இந்த செய்திகள் வெளியான போதே, இது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு மனிதர் பாரில் அமர்ந்து மது அருந்துவதில் என்ன இருக்கிறது? இது போன்ற செய்திகளை கவர் ஸ்டோரி போல வெளியிடுவது தவறு என சிலர் கூறினர்.
உண்மையில் ஸ்டீவ் ஸ்மித், கனடாவின் உள்ளூர் தொடரான, குளோபல் T20 யில் பங்கேற்க உள்ளார். அதன் காரணமாக, தற்போது அமெரிக்காவில் தங்கி ஒய்வு எடுத்துவிட்டு, அண்டை நாடான கனடாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.