இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் பிரதமர் நேரில் காண வருகிறார்.
பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் போட்டியை நேரில் காண வரவுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ஷேக் ஹசினா தாகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த இந்தியா சார்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுடன் ஆலோசித்து பதிலளிப்பதாக தெரிவித்திருந்தது. இந்தச் சூழல் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளங்சிவப்பு நிற(Pink) பந்து பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.