இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் போடும்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் ஜெயிக்கவில்லை. அதில் 6 போட்டிகள் தோல்வியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்தது. இதனையடுத்து இன்றையப் போட்டியில் எப்படியாவது டாஸ் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் ஓர் முடிவை எடுத்தது. அது கிரிக்கெட்டில் அரிதினும் அரிதாக நிகழ்வது.
இன்றையப் போட்டியில் அணியின் கேப்டனாக டூப்ளஸிஸ் டாஸ் போடுவதற்கு களத்துக்கு சென்றார். ஆனால் கூடவே பவுமாவும் சென்றார். கோலி டாஸ் நாணயத்தை மேலே சுழற்ற அது ஹெட்டா, டெயிலா என்பதை டூப்ளஸிஸ் சொல்லவில்லை (ஏன்னா ராசி அப்படி), மாறாக பவுமா சொன்னார். பவுமா டெயில்ஸ் என சொல்ல, ஆனால் விழுந்ததோ ஹெட். இம்முறையும் கோலியே டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தார். கேப்டனுக்கு பதிலாக மற்றொருவர் டாஸ் சொல்வதற்கு Proxy Skipper என்று பெயர். தென்னாப்பிரிக்கா மீண்டும் டாஸ் இழந்த பின்பு, கோலி நக்கலாக சிரித்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார், இதன் பின்பு களமிறங்கிய புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதற்கடுத்து ஆட வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் பெவிலியின் திரும்பினார். தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டையும், நார்ட்ஜே 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இப்போது, ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணியின் ஸ்கோர் 118 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.