ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு புனே அணிக்காக சிறப்பாக விளையாடிய 18 வயதான இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலக வாஷிங்டன் சுந்தருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் மொகாலியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார்.
இதன் மூலம் குறைந்த வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தார் வாஷிங்டன் சுந்தர். இந்த வகை பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். அவர் 16 வயது 238 நாட்களை கடந்திருந்த போது இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியிருந்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் மணீந்தர் சிங், ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், லட்சுமி ரத்தன் சுக்லா, சேத்தன் சர்மா ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே வாஷிங்டன் என்ற பெயருக்கும் சென்னையில் பிறந்த சுந்தருக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் தெளிவுப்படுத்தியிருந்தார்.
அவர் கூறும்போது, “நான் ஒரு இந்து, எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் வசித்த திருவல்லிக்கேணியில் இருந்து இரண்டு தெருக்களுக்கு தள்ளிதான் முன்னாள் ராணுவ வீரரான பி.டி.வாஷிங்டன் வசித்து வந்தார். அவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். மெரினா கடற்கரையில் நாங்கள் விளையாடும் ஆட்டத்தை பார்க்க எங்களுடன் வருவார். என் ஆட்டத்தை அவர், அதிகம் விரும்புவார். நான் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, கட்டணம், புத்தகம் உள்ளிட்டவற்றை அவர் தான் வாங்கி கொடுப்பார்.
மேலும் தனது சைக்கிளில் என்னை அமரவைத்துக் கொண்டு மெரினாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அழைத்துச் செல்வார். தொடர்ந்து என்னை அவர் ஊக்கப்படுத்தினார். 1999-ம் ஆண்டு வாஷிங்டன் இறந்தார். அந்த ஆண்டுதான் எனது மனைவி குழந்தை பெற்றெடுத்தார்.
பேறுகாலத்தின் போது எனது மனைவி சிரமங்களை சந்தித்தார். ஆனால் குழந்தை நலமுடன் பிறந்தது. இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என்ற பெயரை ஓதினேன். ஆனால் பி.டி.வாஷிங்டன் மீது கொண்டிருந்த பற்று காரணமாக வாஷிங்டன் சுந்தர் என பெயரை மாற்றினேன்” என்றார்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 65 ரன்ளை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.