இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுட் என தெளிவாக தெரிந்த போதிலும் பென் ஸ்டோக்ஸிற்கு அவுட் கொடுக்காத அம்பயரின் முடிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் கை ஓங்கி உள்ளது. அதே போல் ஐபிஎல் தொடரில் அதிகமாக இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவதால் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இரு அணி வீரர்களும் அவ்வளவாக சண்டையிட்டு கொள்ளவில்லை, இரு அணி வீரர்களும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரையும் சீண்டும்படி செயல்படவில்லை.
வீரர்கள் பெரிதாக சண்டையிட்டு கொள்ளாததால் இந்த தொடரில் எந்த சர்ச்சையும் இல்லை என்ற பெயர் வந்துவிட கூடாது என நினைத்ததை போன்று ஒவ்வொரு போட்டியிலும் அம்பயர்கள் தங்களது தவறான முடிவுகளால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர், அது இந்திய அணிக்கும் சில போட்டிகளில் பின்னடைவை கொடுத்தது.
டி.20 தொடரின் போது சாப்ட் சிக்னல் என்ற பெயரில் தரையில் பட்ட பந்திற்கு எல்லாம் கேட்ச் கொடுத்த அம்பயர்கள், ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து தவறான முடிவுகளையே வழங்கி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் 26வது ஓவரின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அடித்த ஒரு பந்தை அதை பீல்டிங் செய்த குல்தீப் யாதவ் ஸ்டெம்பை நோக்கி துல்லியமாக வீசினார், இது அவுட்டா இல்லையா என்பது தெளிவாக தெரியதால் கள நடுவர்கள், மூன்றாவது நடுவரை நாடினார், மூன்றாவது நடுவர் பரிசோதிக்கையில் பென் ஸ்டோக்ஸின் பேட் கிரீஸ் லைனை தாண்டி உள்ளே வரவில்லை என தெளிவாக தெரிந்தது, இதனால் மூன்றாவது அம்பயர் அவுட் தான் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது அம்பயரோ அது அவுட் இல்லை என்று அறிவித்து விட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்கள் இங்கிலாந்து அணிக்கு சாதகமாவே செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.