இனிமே ஹர்திக் பாண்டியா-வோட எல்லா மேட்ச்லயும் இந்த பையனும் இருப்பான்.. ஓடிஐ டீமுக்குள் சீக்கிரமே வருவான் – முன்னாள் வீரர் பேச்சு!

இனி ஹர்திக் பாண்டியா-வின் டி20 அணியில் எப்போதும் சிவம் மாவி இருப்பார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா.

இளம் வீரர் சிவம் மாவி, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அண்டர்-19 உலககோப்பையில் அபாரமாக செயல்பட்டதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். கடந்த 2022 ஐபிஎல் வரை கொல்கத்தா அணியில் விளையாடி வந்தார்.

டிசம்பர் 23ல் நடந்த 2023 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு சிவம் மாவியை வெளியே அனுப்பியது கொல்கத்தா அணி. மினி ஏலத்தில் இவரை 6 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்துக் கொண்டது.

ஏலம் முடிந்த அடுத்த சில தினங்களிலேயே இலங்கை உடன் நடக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டி20 அணியில் சிவம் மாவி எடுக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்குள் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே மாறிப்போனது என்றே கூறலாம்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இந்தியாவின் டி20 அணிக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். இடம்பிடித்த முதல் டி20 தொடரிலேயே முதல் போட்டியில் பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்துள்ளார்.

இதனால் சிவம் மாவி இந்திய டி20 அணிக்குள் எடுத்து வரப்பட்டதற்கு ஹர்திக் பாண்டியா-வின் தலையீடு கட்டாயம் இருக்கும் என்றும், அடுத்து வரும் டி20 போட்டிகள் அனைத்திலும் தொடர்ந்து சிவம் மாவிக்கு இடம் கொடுக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா.

“சிவம் மாவியின் மனப்போக்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் கொடுத்தார். ஆனாலும் அடுத்த பந்தை ரன்கள் விட்டுக் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதற்காக வீசாமல் அட்டாக் செய்தார். அதற்குப் பலனாக விக்கெட் கிடைத்தது.

அறிமுகப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதை வாழ்நாளில் மறக்கவே மாட்டார். ஹர்திக் பாண்டியா-வும் மாவி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட இவர், சில தினங்களில் இந்திய அணிக்கும் எடுக்கப்பட்டிருக்கிறார். பிளேயிங் லெவனிலும் இருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது சிவம் மாவி ஹர்திக் பாண்டியா-வின் எந்த ஆதரவை பெற்றுள்ளார் என்று. இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து இவருக்கு இடம் கொடுப்பதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு தகுதியானவராகவும் மாவி தெரிகிறார்.” என கருத்து தெரிவித்திருக்கிறார் அஜய் ஜடேஜா.

Mohamed:

This website uses cookies.