சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்! இந்த மேட்ச்க்குனு ஒரு மாஸ் இருக்கு!

மற்ற அணிகளை சென்னை வீழ்த்தும் போது சாதாரணமாக கொண்டாடிவிட்டு நகர்ந்து செல்லும் ரசிகன், மும்பையை வீழ்த்தும் போது ஆனந்த கூத்தாடுகிறான்.

தமிழகத்தில் சூழல் சரியில்லை. சென்னையில் ஐபிஎல் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், நாளைமறுநாள் (சனி), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்திருக்கிறது சிஎஸ்கே. அதுவும், தனது முதல் போட்டியிலேயே மும்பை மண்ணில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இது உண்மையிலேயே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கடும் சவாலானது தான்.

ஐபிஎல்-ல் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றது என்றால், அதன் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவது போன்ற ஒரு தோற்றம் அப்போட்டியில் இருக்கும்.

அது ஏன், ஐபிஎல்லில் மஞ்சள் vs ப்ளூ மோதினால் இவ்வளவு எதிர்பார்ப்பு?

இந்த இரு மண்ணிலும் கிரிக்கெட் தான் பிரதானமான விளையாட்டு. கால்பந்து, டென்னிஸ், கபடி போன்றவை இதற்கு அப்புறம் தான். மும்பையின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர். தமிழகத்தின் அடையாளம் மகேந்திர சிங் தோனி. அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், பெற்றெடுக்காத தாயின் பிள்ளையைப் போன்றவர் தான் தமிழகத்திற்கு தோனி.

சோ, சச்சின் – தோனி தான் மும்பை – சென்னை ஆட்டம் அனல் பறக்க மிக முக்கிய காரணம். சச்சின் விளையாடாவிட்டாலும், அவரது சீடரான ரோஹித் தலைமையில் எப்போதும் டாப் கிளாஸ் அணியாகவே மிரட்டுகிறது மும்பை அணி.

இரண்டாவதாக, மும்பை என்பது இந்திய கிரிக்கெட்டின் மையப் புள்ளி. இங்கிருந்து தான் இந்தியாவின் பெரும்பாலான தலை சிறந்த வீரர்களும், ஹீரோக்களும் உருவாகின்றனர். மும்பை என்றால் ஆதிக்கம். அனைத்திலும் ஆதிக்கம். இந்தியாவை ஆளுபவர்கள் டெல்லியில் இருந்தாலும், ஆட்சியாளர்களையே ஆளுபவர்கள் மும்பையில் தான் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆளுமைக்கு மத்தியில், வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மாநிலத்தில் பிறந்து, வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திலும் நசுக்கப்பட்டு வரும் தமிழகத்திற்காக விளையாடுபவர் ஹீரோவானால்….? அந்த ஹீரோ, மும்பையை எதிர்கொண்டால்…? அங்கே சுவாரஸ்யத்துக்கு எப்படி பஞ்சம் இல்லாமல் போகும்?. இதுதான் மும்பை – சென்னை போட்டியின் எதிர்பார்ப்பிற்கு காரணம்.

இதனால் தான், மற்ற அணிகளை சென்னை வீழ்த்தும் போது சாதாரணமாக கொண்டாடிவிட்டு நகர்ந்து செல்லும் ரசிகன், மும்பையை வீழ்த்தும் போது ஆனந்த கூத்தாடுகிறான்.

மும்பை அணியின் ஸ்டிராடஜியை கூர்ந்து கவனித்தால், ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். உலகின் தலை சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களை தேடிப்பிடித்து, அவர்களை சக்கையாய் பிழிந்து தூக்கி எறிவது தான் அந்த அணியின் வாடிக்கை. ஏலத்தின் போது, அவர்கள் கையாளும் தந்திரம் மற்ற அணிகளுக்கு கைக்கூடாதவை. உலகில் இன்றைய தேதியில் ஒவ்வொரு பந்துகளையும் அடித்து நொறுக்கும், அதிக பிரபலம் வாய்ந்த முகங்கள் தான் எப்போதும் அவர்கள் அணியில் இருப்பார்கள். பேட்டிங், பவுலிங் என இரண்டு துறையிலும், நிகழ் காலத்தில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை தூண்டில் போட்டு மிக அழகாக ஏலம் எடுப்பார்கள். மற்ற அணிகள் இவர்களை வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கும். ரிஸ்க் என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. எப்போதும் சொகுசாக கிரிக்கெட் ஆடுவதையே விரும்புபவர்கள்.

ஐபிஎல் ஆரம்பித்த புதிதில், வெற்றிப் பெறுவதில் தடுமாறினாலும், யுக்தி என்னவோ அன்றிலிருந்து இன்று வரை ஒன்று தான். அதேசமயம், பாண்ட்யா, பும்ரா ஆகியோரெல்லாம் மும்பை அணியின் கண்டுபிடிப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சென்னை அணியைப் பொறுத்தவரை, மும்பை வேண்டாம் என வீசியெறிந்த ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, ஐபிஎல்-லுக்கே இவர் வேண்டாம் என எந்த அணியும் சீண்டாத ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல சூப்பர் சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கு காரணம் ஒரேயொரு ஆள். தோனி!. ‘இந்த பிளேயர் தான் நமக்கு வேண்டும்’ என கேட்டு கேட்டு வீரர்களை வாங்கியிருக்கிறார். ‘யார் என்ன விமர்சனம் சொன்னாலும் பரவாயில்லை, நான் இருக்கிறேன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள’ என சென்னை நிர்வாகத்துக்கு நம்பிக்கை அளித்து சென்னை அணியை கட்டமைத்துள்ளார். அதே சமயம், தனது பழைய சக வீரர்களையும் மறக்காமல், அவர்களையே திரும்ப வாங்க காரணமாக இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட மும்பை அணியுடன் சென்னை அணி மோதும் போது எப்படி பரபரப்பு இல்லாமல் இருக்கும்!.

Editor:

This website uses cookies.