கரோனா பரவல் எனும் இக்கட்டான சூழலில், இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் இணைப்பது குறித்து அதிரடி முடிவு எடுத்திருக்கிறது பிசிசிஐ தரப்பு.
அதிகபட்ச எதிர்பார்ப்புடன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கொரோனா பரவல் காரணமாக ஆரம்பகட்டத்தில் மைதானத்திற்கு ரசிகர்கள் அனுமதி எதுவும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது. எவ்வித சலசலப்பும் இன்றி சென்று கொண்டிருந்த இந்த தொடரின்போது, 29 போட்டிகளில் முடிந்திருந்த நிலையில் இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு கரோனா பரவல் உச்சத்தை எட்டியது.
குறிப்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாளொன்றிற்கு இறந்து கொண்டிருந்தனர். அதேநேரம் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் நாளொன்றிற்கு பாதிக்கப்பட்டு வந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்த பிசிசிஐ முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறது.
இந்திய வீரர்கள் தங்களது இல்லங்களுக்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்கள் உரிய பாதுகாப்புடன் அவர்களது நாட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவை ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவுற்ற உடன் அடுத்தடுத்த சீசனில் மேலும் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை இணைக்க பிசிசிஐ தரப்பு திட்டமிட்டு வந்தது. இதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏலம் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த சூழலில் தற்பொழுது மீதமிருக்கும் போட்டிகளை நடத்த பிசிசிஐ தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும், 2 புதிய அணிகளை ஐபிஎல் தொடரில் இணைப்பதற்கு தற்போது எந்தவித முடிவும் இல்லை என்றும் தெரிவிப்பதற்காக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதில், “2 புதிய அணிகள் குறித்து தற்போது பேசுவதற்கு சரியான நேரமில்லை. முதலாவதாக, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை எங்கு நடத்துவது; எந்த சூழலில் வீரர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து திட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன. புதிய அணிகள் குறித்து எவ்வித விவாதமும் நடத்தப் போவதில்லை தற்காலிகமாக. அதேபோல், ஜூலை மாதத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு திட்டமில்லை. ஆகையால் அதற்குப்பிறகு நடத்துவதற்கான சாதக நிலையை பார்த்து வருகிறோம்.” என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.