ஹர்திக் பாண்டியா அணிக்குள் இருப்பது மிகுந்த பலம் என முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிகள் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார் ஹர்திக் பாண்டியா. அதன் பிறகு காயத்திலிருந்து குணமடைந்த அவரால் சரியாக பந்துவீச முடியாது என்றும் கூறிவிட்டனர்.
ஆனால் அதனை சரி செய்துகொண்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் முழு கவனம் செலுத்தி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அபாரமாக செயல்பட்டார். அதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று கோப்பையை பெற்றுக் கொடுத்ததால் தற்போது இந்திய அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்டியா மீது நம்பிக்கை வைத்து, 2024 டி20 உலககோப்பையை இலக்காக வைத்து, டி20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்திருக்கிறது பிசிசிஐ.
நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 தொடரிலும் நன்றாக செயல்பட்டார். தற்போது இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடரிலும் நன்றாக பவுலிங் செய்கிறார்.
முதல் போட்டியில் மூன்று ஓவர்களுக்கு 12 ரன்கள், இரண்டாவது போட்டியில் 2 ஓவர்களுக்கு 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நன்றாக கட்டுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருப்பது எத்தகைய பலம் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,
“கடந்த ஆண்டு, ஹர்திக் பாண்டியா அணியில் இருக்க வேண்டுமா? அவரால் பந்து வீச முடியாதே, இனி அவர் அணியில் எதற்கு? என்று என்னிடமே பலரும் கேள்விகளை கேட்டனர். ஆனால் தொடர்ச்சியாக அவர் மீது நான் நம்பிக்கை வைத்து கருத்து தெரிவித்திருக்கிறேன். அதை ஹர்திக் பாண்டியா-விடமும் நான் கூறியுள்ளேன். அவர் அணிக்குள் இருப்பது எத்தகைய பலம், பவுலிங்கை சரி செய்து கொண்டால் எவ்வளவு சிறந்த வீரராக இருப்பார் என பேசியயுள்ளேன்.
அவரது பேட்டிங்கை எப்போதும் குறைகூற முடியாது. பவுலிங்கில் மட்டுமே சற்று சந்தேகம் நிலவி வந்தது. தற்போது அதையும் பேலன்ஸ் செய்து வருகிறார். இரண்டு டி20 போட்டிகளில் நன்றாக செயல்பட்டார். ஆசியகோப்பை மற்றும் டி20 உலககோப்பையிலும் அசத்தினார்.
இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் இரண்டையும் சிறப்பாக பயன்படுத்துகிறார். போதிய வரை பந்தை போல்டு நோக்கி வீசிவருகிறார். அது மிகச்சிறந்த டெக்னிக். ஸ்டெம்பை விட்டு வெளியே வீசுகிறேன், விக்கெட் எடுக்க முயற்சிக்கிறேன் என செயல்படுவதைவிட டி20 போட்டிகளில் ஸ்டம்ப்பை நோக்கி பந்த வீசுவது என்பது நல்ல முயற்சி. அதில் நல்ல பலனும் அவருக்கு கிடைக்கிறது. தற்போது பலருக்கும் புரிந்திருக்கும் ஹர்திக் பாண்டியா-வின் முக்கியத்துவம் என்ன என்று.” என பேசினார்.