இப்படிப்பட்ட தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும்: தோனி கூல்

ஒரு சேஞ்சுக்கு மும்பை வெற்றி பெற ஒரு சேஞ்சுக்கு நேற்று புனேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

10 ஓவர்களுக்குப் பிறகு ஒரு 3-4 ஓவர்களை ரெய்னா, தோனி சரியாகக் கையாளவில்லை, இதனால் 15-20 ரன்கள் குறைவாக எடுத்தது, பிறகு பந்துவீச்சில் சாஹர் காயத்தில் பாதியில் வெளியேற, சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் தோனியின் களவியூகத்தை பகடி செய்யுமாறு ஆடியதில் சென்னைக்குத் தோல்வி, மும்பைக்கு வெற்றி.

இதனையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறும்போது, “இத்தகைய தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும். வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்தால் எந்தத்துறையில் நாம் கடினமாக உழைக்க வேண்டுமென்பது தெரியாமல் போய்விடும்.

இது நல்ல ஆட்டம். இத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் போட்டி எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அதாவது இன்னும் 20 ரன்களை அதிகம் எடுத்திருக்க வேண்டுமா போன்றவற்றை நாங்கள் யோசிக்க வேண்டும். ஆனாலும் இந்தத் தொடரில் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம்.

தவறு எங்கு நடந்தது என்பதை உணர வேண்டும். எப்போதும் சில தனிவீரர்களின் தனிப்பட்ட திறன்களை நம்பியே இருக்கிறோம். நாங்கல் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம். மும்பை இந்தியன்ஸ் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசினர். பேக் ஆஃப் லெந்தில் வீசினர். ஆகவே பந்துகள் மட்டைக்கு வரவில்லை.

அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேகம் வீசினால் பேட்ஸ்மென்களை பின்னால் சென்று ஆட வைக்க முடியும். கிராஸ் பேட் ஷாட்கள் இந்தப் பிட்சில் எளிதல்ல. அவர்கள் ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், எங்கள் பவுலர்கள் வீச முடிவு செய்த பந்துகள் இன்னும் கொஞ்சம் நல்ல பந்துகளாக அமைந்திருக்கலாம்” என்றார் தோனி.

ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:

காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.

அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.

முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.

அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.

கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.

Editor:

This website uses cookies.