இவர்கள் இருவரின் உதவியால்தான் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றோம் என மகிழ்ச்சியாக பேட்டியளித்திருக்கிறார் ஆரோன் பின்ச்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இவர்கள் இருவருமே அரைசதம் கண்டனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 156 ரன்கள் சேர்த்தது. வார்னர் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்ததாக பின்ச் மற்றும் ஸ்மித் இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர் இதில் பின்ச் 114 ரன்களும் ஸ்மித் 105 ரன்கள் விளாச 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி, மயங்க் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி சற்று தடுமாற்றம் கண்டது.
பின்னர் ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அரைசதம் அடிக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ஷிகர் தவான் 74 ரன்கள், ஹர்திக் பாண்டியா 90 ரன்ளுக்கும் ஆட்டமிழக்க 308 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் போட்டியை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. போட்டி முடிந்த பிறகு வெற்றிக்களிப்பில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்,
“நீண்ட நாட்களுக்கு பிறகு 50 ஓவர் போட்டிகளில் விளையாடும் பொழுது எனது ஆட்டத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். நல்ல துவக்கமாக வைப்பதற்கு உதவினார். நான் துவக்கத்தில் சற்று தடுமாறிய போது அவர் நிலைத்து ஆடியது எனக்கு பக்கபலமாக இருந்தது. மேலும் இரண்டு முறை நான் ஆட்டமிழக்க நிகழ்ந்தபோது எனக்கு கிடைத்த அதிசயம் உதவியது. அதனால் என்னால் சதம் விளாச முடிந்தது.
அதேபோல மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்த பொழுது மேக்ஸ்வெல் சிக்ஸர்களை விளாசி அணியை மீண்டும் ரன் குவிப்பில் எடுத்துச் சென்றபோது ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியதாக நான் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசிகர்கள் மத்தியில் விளையாடியது நல்ல உணர்வாகவும் அமைந்தது.
ஒட்டுமொத்தமாக அணியில் அனைவரும் நன்றாக செயல்பட்டனர் என்பது என்றே கூற வேண்டும். நல்ல ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நான் இதைப் பார்க்கிறேன். இந்திய அணி செய்த தவறை நாங்கள் சரி செய்து கொண்டதால் எங்களால் நன்றாக ஆட முடிந்திருக்கிறது. இன்று தோல்வியை தழுவியதால் அவர்கள் ஒன்றும் எளிதான அணி அல்ல.” என கூறினார்.