கிட்டத்தட்ட எங்களிடமிருந்து போட்டியை பறித்துவிட்டார்கள் என்றே நினைத்தேன். கடைசியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என பேசியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக்கா.
இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது இந்திய அணி.
இலங்கை அணிக்கு துவக்க வீரர் குஷால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் மற்றும் நிஷங்கா 33 ரன்கள் அடித்து சிறந்த துவக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
15 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது இலங்கை அணி. அந்த சமயத்தில் உள்ளே வந்த கேப்டன் ஷனக்கா வெறும் 22 பந்துகளில் 56 ரன்கள் அடித்து இலங்கை அணி 200 ரன்கள் அடக்க உதவினார். 20 ஓவர்களில் இலங்கை 206/6 ரன்கள் சேர்த்தது.
அதைத் தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு படுமோசமான துவக்கம் அமைந்தது. 57 ரன்களில் 5 விக்கெட் இழந்தபோது, சூரியகுமார் மற்றும் அக்ஸர் இருவரும் நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர்.
சூரியகுமார் 51 ரன்கள், அக்சர் பட்டேல் 65 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். இவர்கள் இருவரும் ஆடியவிதம், கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. வெற்றியை கடைசி ஓவரில் இந்திய அணி நழுவவிட்டது.
இலங்கை அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது கேப்டன் ஷனக்கா-வின் பேட்டிங். அதனால் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர் கூறுகையில,
“மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருக்கலாம் என தோன்றியது. பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கம் கொடுத்தார்கள். இறுதியில் என்னால் நன்றாக பினிஷ் செய்ய முடிந்தது. இந்திய வீரர்களும் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். கடைசியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் தான் நிறைய ரன்கள் வாரிக்கொடுத்துவிட்டோம் என்று ஒருபோதும் கூறமாட்டேன்.
இந்திய பேட்ஸ்மேன்களின் சிறப்பான பேட்டிங்கை பார்த்ததில் கிட்டத்தட்ட எங்களிடமிருந்து போட்டியை பறித்துவிட்டார்கள் என்றே நினைத்தேன். இறுதியில் சமாளித்து வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. அக்சர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அபாரம். நல்ல ஸ்கோரை நாங்கள் எட்டியிருந்ததால் எங்களால் கட்டுப்படுத்த முடிந்துவிட்டது. இல்லையெனில் கட்டாயம் இந்திய அணி பக்கம் ஆட்டம் மாறி இருக்கும். அவர்களை இந்த கண்டிஷனில் வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.