‘சிஎஸ்கே அணி எளிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். இனி அவர்கள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை’ என்கிற அதிர்ச்சிகரமான கருத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. 12 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
மீதம் இருக்கும் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிஎஸ்கே அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் முதல் இரண்டு இடங்களுக்கும் முடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டது.
சிஎஸ்கே அணி இப்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் மட்டுமே பெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடித்தாலும், கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்கிற நிலைக்கும் தள்ளப்பட்டது.
சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்வதால், பலம்மிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக சிஎஸ்கே அணியை வீழ்த்தி விடும் என்கிற கருத்தை முன்வைத்தார். இனி சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிக மிகக்குறைவு என்றும் பேட்டி அளித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறியதாவது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டு வருகிறது. சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலும் போகலாம். ஏனெனில் இப்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சினை தெளிவாக எதிரணிக்கு தெரிகிறது. கடைசி லீக் போட்டியை பைனல் போல எதிர்கொள்வார்கள். வெற்றி உறுதியாக கிடைக்கும் என்றும் சொல்ல இயலாது. சிஎஸ்கேவின் சறுக்கல் தொடரும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங் எடுத்ததே தவறான முடிவு. இதை தோனியும் போட்டி முடிந்தபின் ஒப்புக்கொண்டார். பனிப்பொழிவு அதிகமாகவே இருந்தது. 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அதற்கேற்றார்போல அவர்கள் ஆடவில்லை.” என்றார்.