சூரியகுமார் யாதவ் மீண்டும் ஃபார்மிற்கு வந்துவிட்டார். அவரை நிறுத்துவதே கடினம் என்று பேட்டியளித்துள்ளார் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாகிர் கான்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுடன் மோசமாக துவங்கியது. அதன் பிறகு மிகச் சிறப்பாக விளையாடி இப்போது 11 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுவிட்டால் பிளே-ஆப் சுற்று உறுதியாகிவிடும் என்ற நிலையிலும் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வரலாறு காணாத வகையில் இந்த வருட ஐபிஎல் சீசனில் மூன்று முறை 200 மற்றும் அதற்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு முழு முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் மீண்டும் ஃபார்மிற்கு வந்தது தான்.
சூரியகுமார், முதல் மூன்று போட்டிகளில் 15, 1, 0 என மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அடுத்த எட்டு போட்டிகளில் 360 ரன்கள் விளாசியுள்ளார். இதில் நான்கு அரைசதங்கள் அடங்கும். மொத்தம் 11 போட்டிகளில் 376 ரன்கள் அடித்து 186 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
கடைசியாக நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் 200 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் சேஸ் செய்தது. இதற்கு முழு முக்கிய காரணம் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசிய சூரியகுமார் யாதவ் தான்.
இந்நிலையில் தொடரின் துவக்கத்தில் மோசமான ஃபார்மில் இருந்த சூரியகுமார் யாதவ் மீண்டும் தனது சிறப்பான ஃபார்மிற்கு வந்ததற்கு என்ன காரணம்? எப்படி அவரால் இவ்வளவு விரைவாக வர முடிந்தது? என்று கருத்து தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஜாகிர் கான். அவர் பேசியதாவது:
சூரியகுமார் யாதவ் ஃபார்மிற்கு வருவதற்கு ஓரிரு போட்டிகள் போதும். அவர் பந்தை எதிர்கொண்டு பின்திசையில் எவ்வளவு சிறப்பாக அடிக்கிறார் என்பதை வைத்து அந்த போட்டியில் அவர் பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம். இவர் பின்திசையில் அதிக அளவில் அடிப்பதால் பவுலர்கள் போதுமானவரை ஒயிட் யார்க்கர் வீசுகின்றனர். அதற்கு ஏற்றவாறு ஃபீல்டிங்கை ஒரு பக்கம் மட்டுமே நான்கு வீரர்களை நிறுத்திவைத்து கட்டுப்படுத்த முற்படுகின்றனர்.
சூரியகுமார் யாதவ் அடிக்க துவங்கினால் அப்படி எளிதாக நிறுத்திவிட முடியாது. அவர் ஃபார்மில் இருக்கும் பொழுது பேட்டிங் செய்யும் விதம் மற்றும் பந்துவீச்சை அணுகும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக அவரே தவறு செய்து ஆட்டம் இழந்ததுபோல, அவரே விக்கெட் விட்டு போனால் மட்டுமே அவுட்டாக்க முடியும்.
சூரியகுமார் யாதவின் ஃபார்ம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபார்ம். இவர் ஆடினால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறுகிறது. இவர் சரியாக விளையாடவில்லை என்றால் மும்பை அணியும் திணறுகிறது.” என்றும் கூறினார்