தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி மோசமாக இழந்துள்ளது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான இம்ரான் தாஹிர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது.
சமகால கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அணியாக பார்க்கப்பட்டு வரும் இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இனி வரும் தொடர்களுக்கு முன்னதாக இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரரான இம்ரான் தாஹிரும், இந்திய அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து இம்ரான் தாஹிர் பேசுகையில், “நான் எந்த அணி சிறந்தது என்று கூற விரும்பவில்லை, ஆனால் இந்திய அணி மிகப்பெரும் பலம் கொண்ட அணி, தென் ஆப்ரிக்கா அணியோ இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய அணியாகவே உள்ளது. சீனியர் வீரர்கள் பலர் தற்போதைய தென் ஆப்ரிக்கா அணி இல்லாததால் இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். தென் ஆப்ரிக்கா அணியை அசால்டாக வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த தொடரில் விளையாடியதே அவர்களின் தோல்விக்கான காரணமாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.