5 விக்கெட்ஸ் போன பிறகு உள்ளே வந்ததும்… என்கிட்ட இப்படி சொல்லிட்டு தான் அடிக்க ஆரம்பிச்சாரு – சர்துல் தாக்கூர் ஆட்டம் பற்றி பேசிய ரிங்கு சிங்!

ஐந்து விக்கெட் போன பிறகும், உள்ளே வந்தவுடன் என்னிடம் இதைச் சொல்லிவிட்டு அடிக்க ஆரம்பித்தார். முதல் பந்தில் இருந்து தெறிக்க விட்டார் என்று சர்துல் தாக்கூர் ஆட்டம் பற்றி பகிர்ந்து கொண்டார் ரிங்கு சிங்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு திருப்புமுனைகள் இருந்தது.

முதலில் ஆர்சிபி பவுலர் டேவிட் வில்லே 4ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கர்ன் சர்மா 12ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட் துவக்கினார்.

12 ஓவர்கள் முடிவில் 94 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது கொல்கத்தா அணி. அப்போது உள்ளே வந்த ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர், வந்த முதல் பந்தில் இருந்தே எந்தவித தடங்களும் இன்றி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக ரிங்கு சிங் விளையாடினார்.

சர்துல் தாக்கூர் 29 பந்துகள் மட்டுமே பிடித்து 68 ரன்கள் விலாசி ஆர்சிபி அணிக்கு பெரிய ட்விஸ்ட்  கொடுத்தார். 89 ரன்களுக்கு 5 விக்கெட்ஸ் இழந்து தடுமாறி வந்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் ஆர்சிபி அணியை மொத்தமாக முடித்து விட்டனர். 123 ரன்களுக்கு ஆர்சிபி அணி ஆல் அவுட் ஆனது. சர்துல் தாக்கூர் ஆடிய இத்தகைய அதிரடியான ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் சேர்ந்து 103 ரன்கள் குவித்தனர். போட்டியில் மிக முக்கிய பங்களிப்பாக இது அமைந்தது.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சர்துல் தாக்கூர் உடன் அமைத்த பாட்னர்ஷிப் பற்றி பகிர்ந்து கொண்ட ரிங்க்கு சிங், சர்துல் தாக்கூர் உள்ளே வந்ததும் என்ன சொன்னார்? அதன் பிறகு எங்களது திட்டம் எப்படி இருந்தது? என்றும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:

“ஐந்து விக்கெட்டுகளை இழந்து பதட்டமான சூழல்கள் நிலவி வந்தபோது, உள்ளே வந்த சர்துல் தாக்கூர் என்னிடம், “விக்கெட் போகதவாறு நீ பார்த்துக் கொள். நான் அடித்து விளையாடி பவுளர்களிடமிருந்து வாய்ப்புகளை பெறப் பார்க்கிறேன்.” என்றார்.

சொன்னதைப்போலவே முதல் பந்தில் இருந்து பவுண்டரி அடிக்கத்துவங்கி அவுட் ஆகும் வரை நிதானத்தை காட்டாமல் சரவெடியாக வெடித்தார். வந்தவுடன் இதுதான் ஒரே பிளான் என்று கூறியபிறகு, நான் சுதாரித்துக் கொண்டு ஒருமுனையில் விக்கெட் விடாமல் பார்த்துக் கொண்டேன். மத்ததை அவர் செய்து முடித்துக்காட்டிவிட்டார். எங்களுக்குள் இதுதான் பேச்சுவார்த்தையாக நடந்தது.” என்று ரிங்கு சிங் பகிர்ந்து கொண்டார்.

Mohamed:

This website uses cookies.