இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் பேட்டிங் எதிரணிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது என பேட்டி அளித்திருக்கிறார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் முக்கிய வீரர்களை பல கோடிகள் கொடுத்து தங்களது அணிக்கு எடுத்தாலும், அந்த வீர்களின் செயல்பாடு குறிப்பிட்ட சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதில்லை. உதாரணமாக கடந்த சீசனில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் நூறு ரன்களுக்கும் குறைவாகவே பேட்டிங்கில் எடுத்ததால் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் இந்தாண்டு அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவர் மட்டுமல்லாது ஏனைய வீரர்கள் சொதப்பினாலும், கடந்த சீசனில் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்கு சென்றதிலிருந்து தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர் எனவும் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
அதிக ரன்கள் அடித்திருந்தாலும் அவரது ஆட்டம் மந்தமாக இருக்கிறது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாஷிம் ஜாஃபர் பதிலளித்திருக்கிறார். அவர் கூறியதாவது,
“கேஎல் ராகுல் கடந்த சீசனில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். ஏனெனில் மிடில் ஆர்டர் வீரர்கள் போதிய அளவிற்கு தங்களது அதிரடியை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இதற்க்கு முக்கிய காரணம். ஆகையால், ஆரம்பத்தில் அவரது அதிரடியான ஆட்டம் வெளிப்படாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த முறை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்தி முக்கிய வீரர்களை அணிக்கு எடுத்திருப்பதால் துவக்கம் முதலே கேஎல் ராகுல்-இன் அதிரடியான ஆட்டத்தை நிச்சயம் கண்டுகளிக்கலாம். இது எதிர் அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என நான் கருதுகிறேன். இம்முறையும் ராகுல் அதிக ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.