எம் எஸ் தோனி ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் வரலாற்றில் ஆடிய ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் இங்கு வந்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் ஆடும் திறமை படைத்தவர். அவருக்கு எதிராக நான் எதையும் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார் டிம் பெய்ன்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னி நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ந்தேதி அடிலெய்டிலும், 3-வது போட்டி 18-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.
டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி உத்வேகத்தை ஒருநாள் போட்டியிலும் தொடர இந்தியா முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்ததால் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அணியில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, நாதன் லயன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் 128 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 45 முறையும், ஆஸ்திரேலியா 73 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டத்தில் முடிவு இல்லை.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரன்டார்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் டர்னர்.வ்