இந்த இந்திய வீரரின் பந்தை தொட கூட முடியவில்லை; புலம்பும் நியூசிலாந்து வீரர் !!

இந்த இந்திய வீரரின் பந்தை தொட கூட முடியவில்லை; புலம்பும் நியூசிலாந்து வீரர்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை அடிக்க முடியவில்லை, பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என்று நியூஸிலாந்து அணியின் விக்கெட்கீப்பர் செய்ஃபெர்ட் வியப்பாகத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், நியூஸிலாந்து சூழலுக்கு எளிதாக, மிகவேகமாக தங்களைத் தகவமைத்துக் கொண்டது குறித்து இந்திய வீரர்களிடம் டிப்ஸ் கேட்க வேண்டும் என்று செய்ஃபெர்ட் தெரிவித்துள்ளார்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. ஆக்லாந்தில் நடந்த இரு போட்டிகளிலும் இந்தியஅணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 3-வது ஆட்டம் 29-ம் தேதி ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது.

முதல் ஆட்டத்தில் விக்கெட் இன்றி தவித்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 2-வது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்திக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 2-வது போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள நியூஸிலாந்துவீரர்கள் கடுமையாகத் திணறினர்.

இதுகுறித்து நியூஸிலாந்து விக்கெட்கீப்பர் டிம் செய்ஃபெர்ட் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது பும்ரா பந்துவீச்சு குறித்து அவர் கூறியதாவது:

முதல் போட்டியில் இருந்ததுபோல் பும்ராவின் பந்துவீச்சு 2-வது போட்டியில் இல்லை. முதல் போட்டியில் பும்ராவின் பந்துகள் மிகவும் மெதுவாக வந்து, அகண்டு சென்றன. பொதுவாக டெத்பவுலர்கள், பேட்ஸ்மேன்களுக்கு நேராகவும்,யார்கர்களாகவும், வீசுவார்கள், அல்லது கலந்து வீசுவார்கள். இது பேட்ஸ்மேன்கள் விளையாடக் கடினமாக இருக்கும்.

ஆனால், பும்ராவின் பந்துவீச்சில் ஒவ்வொரு பந்து ஒவ்வொன்றும் வித்தியாசமாக பேட்ஸ்மேனை நோக்கி வந்ததால் விளையாடுவதற்கு மிகக் கடினமாக இருந்தது. பும்ரா பந்தை எப்படி பிடித்து வீசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் பந்து ஸ்டெம்புக்கு நேராக வந்தால் அதை பேட்ஸ்மேன் விலகிநின்று அடிக்க முடியும், ஆனால் பும்ரா பந்தை அவ்வாறு விளையாட முடியவில்லை.

முதல் இரு போட்டிகளில் மோசமாக விளையாடாமல் நாங்கள் தோல்வி அடைந்தோம். ஆனால் அடுத்துவரும் போட்டிகள் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் வகையில் எங்களின் ஆட்டம் அமையும். புதன்கிழமை நடக்கும் ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழந்துவிடுவோம். ஆனால், அது ஒன்றும் உலகின் கடைசி முடிவு அல்ல. எங்களுக்கு எதிராக அனைத்து காரணிகளையும் திருப்பி வெல்ல முடியும்” என்றார்.

Mohamed:

This website uses cookies.