இன்று முதல் கோலகலமாக துவங்குகிறது டி.என்.பி.எல் திருவிழா !!

இன்று முதல் கோலகலமாக துவங்குகிறது டி.என்.பி.எல் திருவிழா

தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்ற டி.என்.பி.எல், லீக் டி20 கிரிக்கெட் போட்டி திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது. நட்சத்திர வீரர்கள் சிலர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால் இதில் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வருடமாக நடந்து வருகிறது. முதல் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. மூன்றாவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டி திருநெல்வேலி, சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக சென்னை திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர், முதல் சில ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டனாக அஸ்வின் செயல்படுகிறார். அவர் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் தொடர் அங்கு தொடங்கும் வரை இதில் விளையாடுவார். அதன்பின் ஜெகதீசன் கேப்டன் பொறுப்பை ஏற்பார்.

காரைக்குடி காளை அணியின் தினேஷ் கார்த்திக், இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவர் இதில் ஆடவில்லை. டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியில் முழுவதுமாக விளையாட மாட்டார். அதே போல விஜயசங்கர், இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த அணியும் இப்போது இங்கிலாந்தில் விளையாடிவருவதால் அவரும் இதில் விளையாட மாட்டார். திருச்சி அணியில் இடம்பெற்றுள்ள முரளி விஜய், இந்திய அணியின் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் வரை இதில் விளையாடுவார் என்று தெரிகிறது.

கோப்பையை வெல்லும் அணி ரூ.1 கோடியும் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.40 லட்சமும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா இன்று மாலை திருநெல்வேலியில் கோலாகலமாக தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Mohamed:

This website uses cookies.