உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து ஜாம்பவான் கிளென் மெக்ராத் அருகேகூட யாரும் செல்ல முடியாத வகையில் சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம், டாப் 3 இடத்தில் வருவதற்கு இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்காவுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்தில் உலகக் கோப்பை திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கிறது. அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்யும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறை இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆடுகளம் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான முறையில் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பந்துவீச்சாளர்களும் தங்களின் தடத்தை பதிப்பார்கள். இந்தமுறை வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் சாதனை படைக்க பல வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
இருந்தாலும், உலகக் கோப்பைத் தொடரில் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் அருகேகூட இப்போதுள்ள வீரர்களால் வர முடியாது. அதில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு மட்டுமே 3-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
#1.மெக்ராத்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். 39 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்ராத் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தான் முதன் முதலில் அறிமுகமாகிய உலகக் கோப்பைப் போட்டியில்யே 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், அதன்பின் 1999 உலகக் கோப்பையில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அதிகவிக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தைமெக்ராத் பிடித்தார். தன்னுடைய கடைசி உலகக் கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி 71 விக்கெட்டுகள் என்று சாதனை படைத்தார். அதிகபட்சமாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பையில் மெக்ராத்தின் எக்கானமி 3.96 என வைத்துள்ளார்.