முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டோய்னிஸ் இல்லை… எங்கள் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை !!

முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டோய்னிஸ் இல்லை… எங்கள் தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடனான தோல்வி வேதனையளிப்பதாக சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடரின் 39வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்பின் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 108* ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்தது.

இதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் மிக முக்கிய வீரர்களான டி காக் (0), கே.எல் ராகுல் (16) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனி ஆளாக சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன்னும் சேர்த்தார்.

அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரண் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். தீபக் ஹூடா கடைசி நேரத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் மூலம், சென்னை அணியின் அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கி கடைசி வரை விக்கெட்டை இழக்காத ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.3 ஓவரில் இலக்கை அசால்டாக எட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், லக்னோ அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், லக்னோ அணிக்கு எதிரான தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், “இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, ஆனால் இது மிக சிறந்த கிரிக்கெட் போட்டி. லக்னோ அணி அனைத்து வகையிலும் மிக சிறப்பாக செயல்பட்டது. போட்டியின் 14வது ஓவர் வரை போட்டி எங்களது கட்டுப்பாட்டில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோய்னிஸ் தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததும் எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. பயிற்சியின் போதே பனிப்பொழிவு அதிகம் இருந்ததை கவனித்தோம். பனிப்பொழிவு காரணமாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. நாங்கள் விரைவாக இரண்டு விக்கெட்டை இழந்ததால் தான் ரவீந்திர ஜடேஜா4வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் நிர்ணயித்திருந்த இலக்கு வெற்றிக்கு போதுமானது இல்லை என்றே நான் நினைத்தேன். பனிப்பொழிவு எங்களது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், லக்னோ அணி பேட்டிங்கில் செயல்பட்ட விதத்தை பாராட்டியே ஆக வேண்டும், இதன் மூலமே அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.