டிரெண்ட் போல்ட், சஹல் அபார பந்துவீச்சில் டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஓப்பனிங் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு பட்லர்-ஜெய்ஸ்வால் ஜோடி 8.3 ஓவர்களில் 98 ரன்கள் குவித்தது.
25 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 60(31) ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த சஞ்சு சாம்சன்(0), ரியான் பராக்(7) இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அரைசதம் கடந்து ஆடிவந்த ஜோஸ் பட்லர் 79(51) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் ஹெட்மயர் கெமியோ ஆடி 39(21) அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
200 ரன்கள் என்கிற கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணி, முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா(0), மனிஷ் பாண்டே(0) இருவரின் விக்கெட்டையும் இழந்தது. டிரெண்ட் போல்ட் விக்கெட் எடுத்து மெய்டனுடன் ஆரம்பித்தார். அடுத்து வந்த ரைலி ரூஸோவ்(14) விரைவாகவே வெளியேறினார்.
பின்னர் லலித் யாதவ் மற்றும் வார்னர் இருவரும் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 64 ரன்கள் சேர்த்தனர். லலித் யாதவ் 38 ரன்கள் அடித்து தவறான நேரத்தில் அவுட்டானார்.
அடுத்து வந்த வீரர் எவரும் இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்காமல் ஆட்டமிழக்க, டெல்லி அணியில் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. கடைசி வரை போராடிவந்த வார்னர் 65(55) ரன்கள் அடித்து வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். சஹல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். அஸ்வின் 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
31 பந்துகளில் 60 ரன்கள் அடித்து கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.