ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டு பிளிசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. சாம் பில்லிங்ஸ், 7. வெயின் பிராவோ, 8. ஜடேஜா, 9. கரண் சர்மா, 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தவான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜோர்டான் நீக்கப்பட்டு பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரிக்கி புய், 2. சகா, 3. கேன் வில்லியம்சன், 4. யூசுப் பதான், 5. மணிஷ் பாண்டே, 6. ஷாகிப் அல் ஹசன், 7. தீபக் ஹூடா, 8. பில்லி ஸ்டேன்லேக், 9. புவனேஸ்வர் குமார், 10. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரை ஸ்டேன்லேக் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் கேட்சில் இருந்து தப்பினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் இரண்டு ஓவரில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபத் அணி நேர்த்தியான பந்து வீச்சை வெளிப்படுத்தியது.
3-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தது. 4-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் சிக்சருக்கு தூக்கினார். தொடர்ந்து வாட்சன் வாணவேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 1 சிக்சருடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து டு பிளிசிஸ் உடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா பவுண்டரி அடித்தார். 6-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை டு பிளிசிஸ் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் சென்னை அணியால் பந்தை எல்லைக் கோட்டிற்கு அனுப்ப முடியவில்லை. இதனால் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே எடுகக் முடிந்தது.
8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7.1 ஓவரில் 32 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ரெய்னா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவரில் 54 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் சீசனில் முதல் 10 ஓவரில் குறைவான் ரன் இதுவாகும். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
12-வது ஓவரில் இருந்து ரெய்னா, அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். 12-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ரெய்னா. 14-வது ஓவரை ஸ்டேன்லேக் வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடு மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விரட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
15-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 27 பந்தில் அரைசதம் அடித்தார் அம்பதி ராயுடு. அதன்பின் 4-வது பந்தை சிக்சருக்கும், 5-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 16-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடு ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடிக்க, ரெய்னா ஒரு பவுண்டரி அடித்தார்.
17-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அம்பதி ராயுடு 4-வது பந்தில் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். அம்பதி ராயுடு 37 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார். ரெய்னா – அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு அவுட்டாகும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 16.4 ஓவரில் 144 ரன்கள் அடித்திருந்தது.
அடுத்து ரெய்னா உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரெய்னா 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் டோனி இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
கடைசி ஓவரை ஸ்டேன்லேக் வீசினார். இந்த ஓவரில் டோனி ஒரு சிக்ஸ் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்துள்ளது. ரெய்னா 43 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்தும், டோனி 12 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்து வருகிறது.