பக்காவா பிளான் போட்டு பாகிஸ்தானை விரட்டியத்தது இந்திய இளம் படை
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னில் சுருண்டது.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரது விக்கெட்டையும் வீழ்த்த பாகிஸ்தான் இளைஞர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் அளிக்கவில்லை.
ஜெய்ஸ்வால், சக்சேனா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 36-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தியா விக்கெட் இழப்பின்றி 35.2 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும், சக்சேனா 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.