ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ‘பவர்பிளே’யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் லின் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 9.3 ஓவரில் 96 ரன்னாக இருக்கும்போது லின் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். கேகேஆர் 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 32 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷுப்மான் கில் 45பந்தில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே ரஸல் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா நைட் ரைடஸ் அணியின் ஸ்கோர் 200 ரன்னை தாண்டும் நிலையிலேயே சென்று கொண்டிருந்தது.
18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது, 3-வது மற்றும் 5-வது பந்தை அந்த்ரே ரஸல் இமாயல சிக்சருக்கு தூக்கினார். இதனால் 18-வது ஓவர் முடிவிலேயே ஸ்கோர் 197 ஆனது.
30 பந்தில் அரைசதம் அடித்த அந்த்ரே ரஸல், பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்கோர் 212 ரன்கள் ஆனது.
கடைசி ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. அந்த்ரே ரஸல் 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் சர்மா களம் இறங்கினர். ஆட்டத்தின் 1.2 ஓவரில் டி காக் நரேன் பந்து வீச்சில் ரன்கள் எடுக்காத நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக லெவிஸ் களம் இறங்க ஆட்டத்தின் 3.3 ஓவரில் கேரி கர்னி வீசிய பந்தில் சர்மா (12 (9) ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து யாதவ் 26 (14), பொல்லார்ட் 20 (21) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். களத்தில் இறங்கி தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, கொல்கத்தா அணி வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளை சந்தித்த நிலையில் தனது அரை சதத்தை எட்டினார்.
குர்ணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று ரன்களை குவிக்க தொடங்கினர். ஆட்டத்தின் 17.6 வது ஓவரில் கேரி கர்னி வீசிய பந்தில் ரசலிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா அவுட்டனார். இதில் ஹர்திக் பாண்டியா 34 பந்துகளை மட்டுமே சந்தித்து 91 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தின் திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் 19.4 ஓவரில் குர்ணால் பாண்டியா 24 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன், கேரி கர்னி, ரசல் தலா 2 விக்கெட்களையும், பியுஷ் சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.