ஜிம்பாப்வேயிற்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார்
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டி’ஆர்கி ஷார்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
22 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த பிஞ்ச், 50 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார். அத்துடன் 69 பந்தில் 150 ரன்னைத்தொட்டது. இவரது அதிரடியால் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 108 பந்தில் 200 ரன்னைத் தொட்டது.
19-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் அவரது ஸ்கோர் 71 பந்தில் 160 ரன்னைத் தொட்டது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்தார். இதற்கு முன் 156 ரன்கள் குவித்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய ஆரோன் பிஞ்ச் 76 பந்தில் 16 பவுண்டரி, 10 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து உலகசாதனைப் படைத்துள்ளார்.