இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸி.யை வீழ்த்தியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பெர்த்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி.அணி 326 ரன்களுக்கும், இந்தியா 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினர். 43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய தரப்பில் முகமது சமி அபாரமாக பந்துவீசி 56 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்தார். பும்ரா 39 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டையும். இஷாந்த் 1-45 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்தது. ஹனுமா விஹாரி 24 ரன்களுடனும், பந்த் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று 5-ஆவது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி, ஸ்டார்க் பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். பந்த் 30 ரன்களில் லயன் சுழலில் சிக்கினார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்ஃபோர்னில் துவங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 326, இந்தியா- 283
இரண்டாவது இன்னிங்ஸ்: ஆஸி.- 243, இந்தியா- 140 ரன்
ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். லயனுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதையடுத்து 4 டெஸ்டுகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், மெல்போர்னில் 26 அன்று தொடங்கவுள்ளது.
2-வது டெஸ்டுக்கு புவனேஸ்வர் குமாரைத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற கேள்விக்குச் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:
சமீபகாலமாக புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக விளையாடியதில்லை. உமேஷ் யாதவ் விளையாடிய கடைசி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்தார். எனவே அவரைத் தேர்வு செய்தோம். நல்ல உடற்தகுதியில் இருந்திருந்தால் அஸ்வினை நாங்கள் தேர்வு செய்திருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.