ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், டி காக் அதன்பிறகு அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார். 3-ஆவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினார்.
டி காக் பவுண்டரிகளாக அடித்ததால் அந்த அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 46 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, டி காக் அதிரடியாக விளையாட அவர் தனது 34-ஆவது பந்தில் அரைசதம் அடித்தார். இவருடைய இந்த ஆட்டத்தால் அந்த அணி முதல் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.
ஆனால், அதன்பிறகும் சூர்யகுமார் யாதவ் அதிரடிக்கு மாறவில்லை. தொடர்ந்து துரிதமாக ரன் குவிக்க திணறிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே டி காக் 47 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தை எட்டியதால் ஹார்திக் பாண்டியா மற்றும் போலார்ட் களமிறக்கப்பட்டனர்.
இதையடுத்து, போலார்ட் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, 19-ஆவது ஓவரில் ஹார்திக் அதிரடி காட்ட அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம், அந்த அணி 150 ரன்களை கடந்தது.
ஆனால், கடைசி கட்ட ஓவர்களை கச்சிதமாக வீசக் கூடிய ஆர்ச்சர் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஹார்திக் பாண்டியாவை வீழ்த்தினார். எனினும், கடைசி பந்தில் பென் கட்டிங் சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார்.
16, 18 மற்றும் 20-ஆவது ஓவரை வீசிய ஆர்ச்சர் அந்த 3 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால், இந்த போட்டியில் அவர் 3 கேட்சுகளை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஷரேயாஸ் கோபால் 2 விக்கெட்டுகளையும், உனத்கட், ஸ்டுவர்ட் பின்னி மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.