ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தோனி 2-ஆவது ஓவரிலேயே ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைத்தார்.
அதற்கு பயனளிக்கும் வகையில், கெயில் 5, மயங்க் அகர்வால் 0 என ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இதனால், அந்த அணி 7 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால் அதன்பிறகு ராகுல், சர்பிராஸ் ஜோடி பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் தொடக்கத்தில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவரில் அவர்கள் துரிதமாக ரன் சேர்த்தனர்.
எனினும், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு கூட்டணியான ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் ஆகியோர் அட்டகாசமாக பந்துவீசி அந்த அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர். ஆனால், பஞ்சாப் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இதனால், ராகுல் மற்றும் சர்பிராஸ் இருவரும் அரைசதம் அடித்தனர்.
சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்ற நெருக்கடி நிலை உருவானது. அதேசமயம், கடைசி 3 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்கள் தான் வீசவேண்டும்.
இந்நிலையில், குக்லெஜின் ஓவரில் அதிரடிக்கு மாற முயன்ற ராகுல் 47 பந்துகளில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல், சர்பிராஸ் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. ராகுல் ஆட்டமிழந்ததால் அந்த ஓவரில் 7 ரன்கள் தான் கிடைத்தது.
கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவை என மிக இக்கட்டான நிலை ஏற்பட்டது. 19-ஆவது ஓவரை சாஹர் வீசினார். நெருக்கடி காரணமாக அவர் முதல் 2 பந்துகளை நோ-பால் வீசினார். எனினும், அடுத்தடுத்த பந்துகளை நன்றாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். அதோடு இல்லாமல் அந்த ஓவரின் கடைசி பந்தில் முக்கியமான விக்கெட்டான மில்லரை போல்டாக்கினார்.
இதையடுத்து, கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.
குக்லெஜின் வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 2 பந்துகளை குக்லெஜின் அற்புதமாக வீசியதால் சர்பிராஸால் ரன் எடுக்க முடியவில்லை. இந்த அழுத்தத்தினால் சர்பிராஸ் அடுத்த பந்தில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதன்மூலம், சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும், குக்லெஜின் 2 விக்கெட்டுகளையும், சாஹர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த இன்னிங்ஸில் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் வீசி 77 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அதுவே, சுழற்பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்கள் வீசி 61 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இதுதான் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தது.