இங்கிலாந்தை துவம்சம் செய்து சதமடித்த விராட் கோஹ்லி;கொண்டாடும் ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகாமில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கோஹ்லி 97 ரன்களும், ரஹானே 81 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி வெறும் 161 ரன்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன் பிறகு 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 44 ரன்களும், கே.எல் ராகுல் 36 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இதன்பிறகு வந்த புஜாரா 72 ரன்கள் எடுத்தார், மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வரும் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 23வது சதத்தை பதிவு செய்து103 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார் (முதல் இன்னிங்ஸில் 3 ரன்னில் சதத்தை தவறவிட்ட கோஹ்லி, இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ரன்கள் அதிகமாக எடுத்து விக்கெட்டை இழந்துள்ளது சுவாரஸ்யமான தகவல்).
கோஹ்லியின் இந்த சதத்தை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களில் கொண்டாடி வருகின்றனர், மேலும் கோஹ்லிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.