பந்து வீச்சில் நன்றாகத் தொடங்கிய ஆர்சிபி பிறகு சொதப்பியது எப்படி?
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்சின் சிறந்த பேட்ஸ்மென்களான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை 7 ஓவர்களுக்குள் பெவிலியன் அனுப்பியது, வாட்சன், நெகி ஷார்ட் பந்தை புல் ஆட முயன்று மிட் ஆனில் முடிந்தார். ரெய்னாவை தன் வேகத்தினால் திணறடித்த உமேஷ் யாதவ், கடைசியில் ரெய்னா விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் லெக் திசையில் ஒதுங்கினார் ரெய்னா, உமேஷ் ஃபுல் லெந்தில் வீசி ரெய்னாவின் கால்களுக்கு ஸ்விங் செய்தார் ரெய்னா பிளிக் ஷாட் ஆடிய போது எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் ஆனது. ரெய்னா 11 அவுட். சாம் பில்லிங்ஸ் 9 ரன்களில் சாஹல் காற்றில் ஒரு பந்தை மெதுவாகத் தூக்கி வீச மேலேறி வந்து பந்தைக் கோட்டை விட்டார் டி காக் மீதி வேலையை முடித்தார். 59/3 என்று 7வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறியது. 59 ரன்கள் வந்ததற்குக் காரணம் ஒரு முனையில் ராயுடு அற்புதமாக ஆடிவந்ததே.
தோனி மீண்டும் ஜடேஜாவை நம்பி இறக்கி மோசம் போனார். ஜடேஜாவுக்குத்தான் வரவில்லையே பிறகு என்ன அடம்? 3 ரன்களில் சாஹலின் அதிதிருப்ப பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். 9 ஓவர்களில் 76/4. ஜடேஜா பந்துவீச்சில் பந்தைத் திருப்புவதை மறந்து 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருப்பதால் சாஹல் பந்தைத் திருப்பக் கூடியவர் என்பதை மறந்திருக்கலாம்.
உமேஷ் யாதவ் மிக அருமையாக வீசி 4 ஓவர்களை முடித்து 23 ரன்களுக்கு 1 விக்கெட். சாஹலும் 15 ஓவர்களுக்குள் தன் ஸ்பெல்லை முடித்தார் 4 ஓவர்கள் 26 ரன்கள் 2 விக்கெட். இவர்கள் இருவரும் ஓவர்களை முடித்ததன் விளைவு தோனியும், ராயுடுவும் மைதானம் நெடுக பந்துகளை தூக்கித் தூக்கி அடித்தனர். அதன் பிறகு ஒரு 10-11 ஓவர்களில் 12 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராயுடு சிராஜையும், வாஷிங்டன் சுந்தரையும் நன்றாகக் கவனித்தார். சுந்தர் 1 ஓவர் வீசியதோடு சரி அதிலேயே 14 ரன்கள். அதன் பிறகு கொடுக்கவில்லை.
தோனி முதலில் நெகியை மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகு கோரி ஆண்டர்சன் தோனியின் ஹிட்டிங் பகுதிக்குள் கிறுக்குத் தனமாக வீச பந்து லாங் ஆனில் ஸ்டாண்ட்சில் போய் விழுந்தது. இதற்கு முந்தைய பந்தில் ராயுடுவுக்கு எதிராக ஒரு உரத்த எல்.பி.முறையீடு, ரிவியூ செய்தார் கோலி, ஆனால் நாட் அவுட்.
14வது ஓவரில் நெகி மீண்டும் வந்தார், தோனியைப் பார்த்தவுடனேயே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீசினார் தோனி அதனை சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக முறையாக தூக்கி சிக்ஸ் அடித்தார், பிரஸ் பாக்ஸ் கண்ணாடியைப் பதம் பார்த்தது. மீண்டும் ஒரு ஃபுல் லெந்த் பந்து இம்முறை லாங் ஆனில் சிக்ஸ். ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் விரைவில் கற்றுக் கொண்டார், அவர் கற்றுக் கொண்டதைக் கூட இவர் கற்றுக் கொள்ளவில்லை, தோனிக்கு பேக் ஆஃப் லெந்தில் ரூம் கொடுக்காமல் வீச வேண்டும். இதே ஓவரில் ராயுடுவுக்கு வீசினார் ஆனால் ஷார்ட் பிட்ச், ராயுடு அதை தூக்கி ஆன் திசையில் ஒரு சிக்ஸ் அடிக்க ராயுடு 41 பந்துகளில் இன்னொரு அருமையான அரைசதத்தை எட்டினார். இந்த ஓவரில் நெகி 19 ரன்களைக் கொடுத்தார்.
36 பந்துகளில் 80 ரன்கள் சென்னை வெற்றிக்குத் தேவை, இது சாதாரண விஷயமல்ல. 15வது ஓவரை சிராஜ் வீசினார். இறங்கி வந்து ராயுடு கவரில் சிக்ஸ் விளாசினார், இது அவருடைய 6வது சிக்ஸ்.