சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்கலாம் என்கிற கணிப்புகள் மற்றும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை சிறப்பாக துவங்கவில்லை. தனது முதல் போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கம் சொதப்பியதால் நல்ல துவக்கம் கிடைத்தபிறகு, அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. பின்னர் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரிக்கொடுத்ததால் குஜராத் அணியை கட்டுப்படுத்தி வெற்றியும் பெற முடியவில்லை.
இந்நிலையில் சிஎஸ்கே அணி தனது இரண்டாவது போட்டியை வருகிற ஏப்ரல் மூன்றாம் தேதி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆகையால் பிளேயிங் லெவனில் முக்கியமான இரண்டு மாற்றங்களை செய்து சிஎஸ்கே அணி களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணி உத்தேசமாக செய்யப்படவுள்ள இரண்டு மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
முதலாவதாக, டெவான் கான்வெ-க்கு பதிலாக டிவைன் பிரட்டோரியஸ் உள்ளே எடுத்து வரப்படலாம். கடந்த சீசனில் டெவான் கான்வெ நன்றாக விளையாடினார். ஆனால் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை. இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இங்கு சுழல் பந்துவீச்சு நன்றாக எடுபடும். அதிக அளவில் டேர்ன் இருக்கும். நியூசிலாந்து வீரர் வேகப்பந்துவீச்சிற்கு பழக்கப்பட்டவர். ஸ்பின்னர்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை.
குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போதும், ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை. அதேநேரம் பவுலிங் மோசமாக அமைந்ததால், டெத் ஓவர்களில் நன்றாக செயல்படக்கூடிய ஒருவரை சிஎஸ்கே எடுத்துவரலாம். அந்த வகையில் பிரிட்டோரியஸ் எடுத்து வரப்படலாம். கீழ் வரிசையில் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பையும் கொடுக்கக்கூடியவர்.
இரண்டாவதாக, முதல் போட்டியில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறிய சிவம் தூபே வெளியில் அமர்த்தப்பட்டு அஜங்கியா ரகானே உள்ளே எடுத்து வரப்படலாம். ஏனெனில் டெவான் கான்வெ வெளியில் அமர்த்தப்பட்டால் ஓப்பனிங் செய்வதற்கு அஜிங்கிய ரகானே சரியான வீரராக இருப்பார்.
மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் டிவைன் பிரட்டோரியஸ் எடுக்கப்படுவதால் சரியாக இருக்கும். மேலும் ரகானே ஸ்பின்னர்களை நன்கு ஆடக்கூடியவர். பவர்-பிளே ஓவர்களில் அதிக பவுண்டரிகளையும் அடிக்கக்கூடியவர். அதிரடியாக ஆடிவரும் ருத்துராஜுடன் இறக்கினால் சிஎஸ்கே அணி கூடுதல் பலம் பெறும்.
இரண்டாவது போட்டியில் இந்த இரண்டு மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கும் என்று கணிப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.