14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் இருக்க கூடியவை என மனம் திறந்துள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
2005ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்த தோனி, குறுகிய காலத்திலேயே இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்திய அணியில் அடுத்தது சில அதிசயங்களை நிகழ்த்தி இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவிற்க்காக பெற்று தந்தார். 2009ஆம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.
2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்ததே இவர் செய்த சம்பவங்களில் தரமான சம்பவம். பின்னர், சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-இன் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை இன்றளவும் இவருக்கு உண்டு.
இந்நிலையில், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னால் மறக்கமுடியாத இரு நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் முன்னாள் கேப்டன் தோனி.
முதலாவதாக, ராகுல் டிராவிட் தலைமையில் 2007ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு வந்த முதல் டி20 உலககோப்பைக்கு சென்ற இளம் இந்திய படையின் தலைவனாக தோனி நியமிக்கப்பட்டார்.
தனது சிறப்பான கேப்டன்ஷிப்பில், இந்தியாவிற்கு கோப்பையை பெற்று வந்தார். கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியுடன் கோப்பையை எடுத்துக்கொண்டு கடற்கரை ஓரமாக திறந்தவெளி பேருந்தில் பயணித்ததே மறக்க முடியாத முதல் அனுபவமாக கூறியுள்ளார்.
இரண்டாவதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில், கடைசியாக 20 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், ரசிகர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி உற்சாகம் ஊட்டினார்கள். அதனை மறக்க முடியாத இரண்டாவது தருணமாக குறிப்பிட்டுள்ளார்.