லக கோப்பை கால்பந்து (17 வயது) தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று பிரேசில், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்ட) தொடர் நடக்கிறது. இதில் இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. கோல்கட்டாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பிரேசில், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்காக முதலில் கவுகாத்தி சென்ற இரு அணியினர், மழை காரணமாக போட்டி கோல்கட்டாவுக்கு மாற்றப்பட்டதால், உடனடியாக இங்கு வந்து சேர்ந்தனர்.
லீக் சுற்றில் முழு வெற்றி பெற்ற பிரேசில் அணி, அடுத்து ஹோண்டுராசை வீழ்த்தியது. காலிறுதி, தற்போது அரையிறுதி மற்றும் இதில் வென்றால், அக்., 28ல் நடக்கும் பைனல் என, மூன்று முக்கிய போட்டிகளையும் பிரேசில் அணி, கோல்கட்டாவில் விளையாடுவது பெரும் பலம் தான்.
ஏனெனில், கடந்த 1977ல் பீலே இங்கு வந்து சென்ற பின், அனைவரும் பிரேசில் ரசிகர்களாக மாறிவிட்டனர். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதியில் முதல், 70 நிமிடங்கள் வரை 0-1 என, பின் தங்கியிருந்தது.
கடைசி நேரத்தில் இரு கோல் அடித்ததற்கு, இங்கு திரண்ட ரசிகர்கள் (66,613 பேர்) ஆதரவும் முக்கிய காரணம் தான். தவிர, தலா 3 கோல்கள் அடித்த முன்கள வீரர்களான பவுலினோ, லின்கால்ன், பிரென்னர் மற்றும் ஜெர்மனிக்கு எதிராக மிரட்டிய வேவர்சன் என, எல்லோரும் நல்ல ‘பார்மில்’ உள்ளனர்.
இருப்பினும், பலமான இங்கிலாந்துக்கு எதிராக இன்று சாதிப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், இங்கிலாந்தை பொறுத்தவரையில் லீக் சுற்றில் இருந்து மெக்சிகோ, சிலி, அமெரிக்கா என, வலுவான அணிகளுக்கு எதிராகத் தான் சாதித்து வந்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த ரியான் பிரூஸ்டர், ஒயிட், சாஞ்சோ, கோம்ஸ் என, பலரும் அணிக்கு கைகொடுக்கின்றனர்.
மாலியை சமாளிக்குமா ஸ்பெயின்
மும்பையில் இன்று நடக்கும் உலக கோப்பை (17 வயது) தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின், மாலி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் லீக் சுற்றில் முதல் போட்டியில் தோற்ற பின், அடுத்து எழுச்சி பெற்று வந்தன. மூன்று முறை யூரோ சாம்பியன் ஆன ஸ்பெயின் (17 வயது) அணி, தங்களது வழக்கமான ‘டிக்கி-டாக்கா’ பாணியில் பந்தை குறுகிய துாரத்துக்குள் ‘பாஸ்’ செய்து அசத்துகின்றனர்.
முன்கள வீரர் அபெல் ரூயிஸ் (4 கோல்) தவிர, மற்ற வீரர்கள் பெரியளவில் ஜொலிக்காதது பலவீனம் தான்.
கடந்த முறை பைனல் வரை முன்னேறிய மாலி அணி வீரர்கள், நீண்ட துாரம் அடித்து பந்தை ‘பாஸ்’ செய்வதில் வல்லவர்கள். இதுவரை நடந்த போட்டிகளில் 128 முறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, இவர்களது தாக்குதல் பலத்தை காட்டுகிறது. இதுவரை 5 கோல் அடித்த லாசனா, ஹட்ஜி, டிராவோர் (தலா 3 கோல்) இன்றும் கைகொடுப்பர் எனத் தெரிகிறது.
டிக்கெட்டுகள் காலி
பிரேசில்-இங்கிலாந்து போட்டி, கடந்த 23ம் தேதி கோல்கட்டாவுக்கு மாற்றப்பட்டது. அன்று இரவு 8:30 மணிக்கு அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன் லைனில் துவங்கியது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால், இன்று மைதானம் நிரம்பி வழியும் எனத் தெரிகிறது.