U19 உலகக்கோப்பை : இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் கால்இறுதிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

ஜூனியர் உலக கோப்பை

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜார்டன் 86 ரன்னும், டார்விஷ் ரசோலி 63 ரன்னும், இக்ராம் அலி கில் 55 ரன்னும் எடுத்தனர்.

கால்இறுதியில் ஆப்கானிஸ்தான்

பின்னர் ஆடிய இலங்கை அணி 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை விட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றிக்கு 38 ஓவர்களில் 235 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 202 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த ஆப்கானிஸ்தான் அணி கால்இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இலங்கை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை எளிதில் தோற்கடித்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகோப் புலா 180 ரன்னும், ராசின் ரவிந்திரா 117 ரன்னும் குவித்தனர். பின்னர் ஆடிய கென்யா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்னே எடுத்தது. தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கென்யா அணி கண்ட 2-வது தோல்வி இது.

சர்ச்சைக்குரிய அவுட்

‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான்டில் மாக்வேது 99 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 45.3 ஓவர்களில் 206 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

முன்னதாக தென்ஆப்பிரிக்க அணி வீரர் ஜிவேசன் பிள்ளை 47 ரன்னில் இருக்கையில் பந்தை அடித்து ஆடுகையில் பந்து ஸ்டம்பின் அருகில் விழுந்து உருண்டது. ஸ்டம்பை பதம் பார்த்து விடக்கூடாது என்று எண்ணிய பிள்ளை பந்தை கையால் தடுத்து நிறுத்தினார். இதனை எதிர்த்து வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் இம்மானுவேல் ஸ்டீவர்ட் நடுவரிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்தார். ஜிவேசன் பிள்ளை ‘அவுட்’ என்று நடுவர் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. ஜிவேசன் பிள்ளைக்கு எதிராக அவுட் கேட்டது கிரிக்கெட் உத்வேகத்துக்கு எதிரானது என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-வங்காளதேசம், கனடா-நமிபியா (அதிகாலை 3 மணி) மோதுகின்றன.

Editor:

This website uses cookies.