உமேஷ் யாதவ் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேட்டி அளித்திருக்கிறார் அஜித் அகர்கர்.
சிட்டோகிரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி நிர்ணயித்த 513 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேசம் அணி 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இறுதியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் நான்கு விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், மற்ற மூன்று பவுலர்களான அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இதில் உமேஷ் யாதவ் வீழ்த்திய விக்கெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இலக்கை துரத்திய வங்கதேச அணியின் துவக்க ஜோடி சான்டோ மற்றும் ஜாகீர் இருவரும் சேர்ந்து 124 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியில் சான்டோ விக்கெட்டை சிறப்பாக திட்டமிட்டு கைப்பற்றினார் உமேஷ் யாதவ்.
இரண்டாவது இன்னிங்சில் 5 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மொத்தம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே உமேஷ் யாதவ் கைப்பற்றி இருந்தாலும் இரண்டுமே முக்கியமான தருணத்தில் வந்தவை.
35 வயதான உமேஷ் யாதவ் ஆசிய மைதானங்களில் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 111 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 49.4 ஆகும். லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர்களான வக்கார் யூனிஸ், அக்தர் மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக உமேஷ் யாதவ் இருக்கிறார். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் ஆசிய மைதானங்களில் உமேஷ் யாதவ் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று.
உமேஷ் ஆதவ் பற்றிய சமீபத்திய விவாதத்தில், அவரது பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர். அவர் பேசியதாவது:
“உமேஷ் யாதவ் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அவரது பங்களிப்பை சரிவர தெரிந்து கொள்ளாதவர்கள் தான் இத்தகைய விமர்சனங்களை செய்து வருகிறார்கள். உமேஷ் யாதவ் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனது கேப்டனுக்கு அன்றைய நாளில் தேவையான பங்களிப்பை நன்றாக செய்திருக்கிறார். அவரது புள்ளி விவரங்களும் சிறப்பாகவே இருக்கின்றன.
குறிப்பாக ஆசிய மைதானங்களில் அவர் கொடுத்த பங்களிப்பிற்கு மிகவும் பெருமையாக உணர வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளில் தாக்குதல் ஏற்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தி தந்திருக்கிறார். ஏனெனில் ஆசிய மைதானங்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிக ஓவர்களை ஸ்பின்னர்கள் தான் வீசுவார்கள். கிடைக்கும் 5, 10 ஓவர்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த வயதிலும் அவர் அதை செய்து வருகிறார் என்றால், நிச்சயம் அவர் லெஜெண்ட் வரிசையில் வைத்துப் பார்க்கக்கூடிய வீரர்.” என்றார்.