தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஐந்து சிக்சர்கள் விளாசி ஆச்சர்யப்படுத்தினார். இவர் தனது இந்த அதிரடிக்கு புதிய பெயர் வைத்துள்ளார்.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதில் ரஹானே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய உமேஷ் யாதவ் யாருமே எதிர்பார்க்காத வகையில் காட்டடி அடித்து, 5 சிக்சர்களை பறக்க விட்டு இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இவர் 10 பந்துகளுக்கு 31 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். டெஸ்ட் அரங்கில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட 30 ரன்கள் இதுவாகும்.
இப்போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்க அணியை சுருட்டி , இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒயிட் வாஷ் செய்தது.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த உமேஷ் யாதவ், ஐந்து சிக்ஸர்கள் குறித்து பதிலளித்தார். அவர் குறிப்பிடுகையில், “விராட் கோலி என்னை இஷ்டம்போல ஆடச் சொன்னார். அதனால் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்து அதன் பலனாக சிக்சர்கள் கிடைத்தது. தீபாவளிக்கு முன்னரே “தீபாவளி தமாகா” நடைபெற்றுள்ளது” என்றார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, டெஸ்ட் அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இப்போட்டியில் இவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும், ஒரு ரன் அவுட் மற்றும் அதிரடி பேட்டிங் என அனைத்து விதமாகவும் அணியின் வெற்றிக்கு செயல்பட்டார்.