சச்சினுக்கு பிறகு இவருடைய ஆட்டம் தான் எனக்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்று பெருமிதமாக பேசி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியில் அறிமுகமான வெகு சிலரில் உம்ரான் மாலிக் ஒருவர். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு ஒரு கனவு சீசனாக அமைந்தது. அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.
150 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக பந்து வீசக்கூடியவராக இருக்கும் இவரை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர்கள் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முழுவதுமாக திணறி வந்தனர். மேலும் உடம்பிலும் பல அடிகளை பெற்றனர்.
23 வயதான இவர் இதே வேகத்தில் சென்று கொண்டிருந்தால் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்த வீரராக வலம் வருவதற்கு அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றது என பல ஜாம்பவான்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து தனது வேகத்தினால் பலரையும் ஆச்சரியப்படுத்தி வரும் இவரை புகழ்ந்திருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
கமெண்ட்ரி ஒன்றில் அவர் பேசியதாவது: “சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இவரது ஆட்டத்தை தான் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கிறேன்.” என்றும் பெருமிதமாக பேசினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக உம்ரான் மாலிக்கை பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
உம்ரான் மாலிக் தனது பேட்டியில் பேசுகையில், “வேகத்தை குறைக்காமல் எனது டெக்னிக்கை இன்னும் துரிதப்படுத்த விரும்புகிறேன். இன்னும் துல்லியமாக பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்துவதற்கு புதுப்புது முயற்சிகளை பயிற்சியின் போது செய்து வருகிறேன். தொடர்ந்து இதே நிலையில் இல்லாமல் என்னை நான் வளர்த்துக் கொள்வேன். அதேபோல் எனது உடல் நிலையிலும் முழு கவனம் செலுத்துவேன். எக்காரணம் கொண்டும் எளிதாக காயமடைந்து விடாதவாறு என்னை பார்த்துக் கொண்டால் மட்டுமே நிறைய போட்டிகளில் விளையாட முடியும். அப்போதுதான் நான் விருப்பப்படும் உயரத்திற்கு செல்ல முடியும்.” என்று பேசினார்.