காயத்தால் விலகிய முகமது ஷமி… 12 வருடங்கள் காத்திருந்த வீரருக்கு இடம் கொடுத்தது இந்திய அணி
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக ஜெயதேவ் உனாட்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
வங்கதேச அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரரான முகமது ஷமி, காயம் காரணமாக திடீரென விலகினார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் உம்ரன் மாலிக் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனாட்கட் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த ஜெயதேவ் உனாட்கட்டிற்கு இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. கடந்த 12 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் ஜெயதேவ் உனாட்கட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் போதிலும் அவருக்கான இடம் கிடைக்காமலே இருந்தது. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் 12 வருடமாக காத்திருந்த ஜெயதேவ் உனாட்கட்டிற்கு தற்போது தான் இடம் கிடைத்துள்ளது.
இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.