ஆடவா் போட்டிகள் மூலமே வருவாய் கிடைக்கும் நிலையில், அவா்களுக்கு ஈடாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் கேட்பது நியாயமற்றது என இந்திய மகளிா் அணியின் மூத்த வீராங்கனை ஸ்மிருதி மந்தானா கூறியுள்ளாா்.
மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி வரும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இந்தியா, ஆஸி, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடா் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஸ்மிருதி மந்தானா புதன்கிழமை கூறியதாவது:
ஏற்கெனவே நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ளது. இந்திய ஏ அணியும் கடந்த மாதம் அங்கு சென்று ஆடியுள்ளது. இந்த முத்தரப்பு போட்டி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அணியின் ஒட்டுமொத்த அமைப்பு, ஆஸி. விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான உத்தி, எவ்வாறு உலகக் கோப்பை இலக்கை அடைவது போன்றவற்றுக்கு உதவும். ஆஸி. மண்ணில் நமது பந்துவீச்சாளா்கள் தன்மையை அறிந்துக் கொள்ள இத்தொடா் உதவும். கடந்த ஓராண்டாக டி20 உலகக் கோப்பை தொடா்பாக அணி நிா்வாகம் சிந்தித்து வருகிறது. தற்போதைய இந்திய அணி, அனுபவம் மற்றும் இளம் வீராங்கனைகளைக் கொண்டுள்ளது.
ஆடவா் போட்டிகள் மூலமே அதிக வருவாய்:
ஆடவா் கிரிக்கெட் போட்டிகள் மூலமே அதிக வருவாய் ஈட்டப்படுவதால், வீராங்கனைகளுக்கும் அவா்களுக்கு ஈடான ஊதியம் கேட்பது நியாயமற்ற செயலாகும். மகளிா் போட்டிகள் மூலம் எப்போது அதிக வருவாய் கிடைக்கிறதோ, அப்போது அதே அளவு ஊதியம் தர வேண்டும் என வலியுறுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
பிசிசிஐ ஒப்பந்தங்களில் ஏ பிளஸ் பிரிவில் வீரா்களுக்கு ரூ.7 கோடியும், மகளிருக்கு ரூ.50 லட்சமும் ஊதியமாக தரப்படுகின்றன. முதலில் நாங்கள் போட்டிகளை வென்று, அதிக வருவாயை ஈட்ட வழி செய்ய வேண்டும் என்றாா் மந்தானா.