இந்தியா ஏ அணியில் அபாரமாக ஆடி தேர்வுக்குழுவின் கதவை தொடர்ந்து தட்டிவருகிறார் இளம் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.
மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதான ருதுராஜ் கெய்க்வாட், 2016 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சிக்கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். அதேநேரம், இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். துவக்க வீரரான இவருக்கு அனுபவம் இன்மை காரணமாக ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய ஏ அணியில் இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பெற்று அபாரமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடைசி 8 இந்தியா ஏ போட்டிகளில் இவர் அடித்த ரன்களின் விவரங்கள்.
187* (136)
125* (94)
84 (59)
74 (73)
3 (10)
85 (102)
20 (17)
99 (89) – மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராககடைசி ஒருநாள் போட்டியில்.
இவர் கடைசி 8 ஆட்டங்களில் 677 ரன்கள் குவித்து, 112.83 ரன்களை சராசரியாக கொண்டுள்ளார். குறிப்பாக, இவரது ஸ்ட்ரைக் ரேட் 115 க்கும் மேல்.
தற்போதைய இந்திய அணியில் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரின் இடத்தை பிடிக்க கேஎல் ராகுல் அஜிங்கிய ரஹானே போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் போராடி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா இருவரும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இளம் வீரர் ருதுராஜின் இப்படி அபாரமாக செயல்பட்டு வருவது இந்திய அணியின் தேர்வுக் குழுவிற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாயம் இவரை அணியில் எடுத்தே ஆக வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது. இவர் இந்திய அணியில் நுழையவேண்டுமானால் ரோஹித் மற்றும் தவான் இருவரில் ஒருவர் கட்டாயம் காரணமாகவோ அல்லது ஓரிரு தொடர்களில் ஓய்வு காரணமாக விலகினால் மட்டுமே இது சாத்தியம்.
இவரைப் போன்ற இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் தேர்வுக் குழுவிற்கு நெருக்கடியை கொடுப்பது, வருங்கால இந்திய அணிக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோல் அடுத்தடுத்து வரும் தொடர்களில் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் குறித்த சிக்கலும் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.