சென்னை முதல் டெல்லி வரை.. ஐபிஎல் அணி கழட்டிவிட்ட முன்னணி வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் அணிகளால் கழற்றிவிடப்பட்ட முன்னணி வீரர்களின் பட்டியலை தான் நாம் இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்க இருக்கிறது. ஆனால் ஏலம் நடைபெறுவதற்கு முன்பாகவே மும்பை, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் தங்களது வர்த்தகத்தை துவங்கிவிட்டன.

கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்த அஸ்வின் திடீரென பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு டெல்லி அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் அணியின் பிரதான வீரராக இருந்து வந்த அஜிங்கிய ரஹானே யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று ஐபிஎல் அணிகள் வர்த்தகம் செய்த முன்னணி வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.

மாயங்க் மார்க்கண்டே:

2018 ஆம் ஆண்டு மும்பை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த இவர், கடந்த சீசனில் ராகுல் சாரின் வருகைக்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அடுத்த சீசனில் டெல்லிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார். பின்னர், ரஹானேவை எடுப்பதற்காக டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது

ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 

டெல்லி அணியின் அதிரடி வீரராக கருதப்பட்ட ரூதர்போர்ட் 6.2 கோடிக்கு அடுத்த சீசனில் மும்பை அணிக்கு ஆடுவதற்காக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர் அஸ்வின்

பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்த அஸ்வின், அடுத்த சீசனுக்காக தக்க வைக்கப்பட இருந்தார். பின்னர், முடிவை மாற்றிக் கொண்ட பஞ்சாப் அணி நிர்வாகம், 7.6 கோடிக்கு டெல்லி அணிக்காக வர்த்தகம் செய்துள்ளது. தற்போது புதிய கேப்டனை நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டு வருகிறது.

ஜகதீஷா சுசித் 

இளம் கர்நாடக வீரர் 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை அணிக்காக ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்ட் போல்ட் 

டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த டிரென்ட் போல்ட் திடீரென 2.2 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுவரை, விலை அளவில் இல்லாவிட்டாலும் திறன் அளவில் இது மிகப்பெரிய வர்த்தகமாக கருதப்படுகிறது.

கிருஷ்ணப்ப கவுதம்

அதிரடி ஆல்ரவுண்டரான இவர் 6.2 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு கர்நாடக பிரீமியர் லீக், சையது முஷ்டாக் அலி டிராபி, தியோடர் டிராபி என அனைத்திலும் கலக்கி வரும் இவரை திடீரென ராஜஸ்தான் அணி வர்த்தகம் செய்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அங்கித் ராஜ்பூத் 

கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த இவர், தற்போது 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.

தவால் குல்கர்னி

ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர் 75 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணிக்காக வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறார்.

அஜிங்க்யா ரஹானே 

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரஹானே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென 4 கோடி ரூபாய்க்கு டெல்லி அணிக்காக வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறார்.

ராகுல் தெவதியா

கடந்த சீசனில் டெல்லி அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக இருந்த இவர் ரஹானேவை வர்த்தகம் எடுப்பதற்காக டெல்லி அணியால் 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.