தீவிரவாத குற்றச்சாட்டு; ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதர் கைது
முன்விரோதத்தின் காரணமாக தனது நண்பரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த உஸ்மான் கவாஜாவின் சகோதரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரலிய அணியின் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸி.அணியில் கவாஜா இடம் பெற்றுள்ளார். கவாஜாவின் பேட்டிங், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உஸ்மான் கவாஜாவின் பூர்வீகம் பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா(வயது 26). இவரின் பல்கலைக்கழக நண்பர் முகமது கமீர் நிஜாமுதீன். இந்நிலையில், நிஜாமுதீனுக்கும், அர்சகான் கவாஜாவுக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா போலீஸிக்கு தகவல் அளித்தார். அது தொடர்பாக நிஜாமுதீன் டைரியிலும் கொலைத்திட்டத்தையும் விளையாட்டாக எழுதிவைத்தார்.
இதையடுத்து, நிஜாமுதீனை கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸார் கைது செய்தனர். ஆனால், தனக்கும், சதித்திட்டத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நிஜாமுதீன் மறுத்தார். அதன்பின் போலீஸார் நடத்திய விசாரணையில் டைரியில் பிரதமர் டர்ன்புல்லை கொலை செய்யும் திட்டம் குறித்த விஷயம் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், இது தனது கையெழுத்து இல்லை என்று நிஜாமுதீன் மறுத்தார். அதன்பின் கையெழுத்து சோதனை நடத்திய போலீஸார் அது நிஜாமுதீன் கையெழுத்து இல்லை என்பதை உறுதி செய்து அவரை விடுவித்தனர்.
இந்நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில் முன்பகை காரணமாக உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா இதைச் செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து இன்று அதிகாலை உஸ்மான் கவாஜாவின் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரர் அர்சகான் கவாஜாவை கைது செய்தனர்.
இது குறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் ஆணையர் மிக் வில்லிங் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ நிஜாமுதீன் மிகவும் திட்டமிட்டு இந்தக் குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் மீது இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீனுக்கு தேவையில்லாத தொந்தரவுகளை கொடுத்துவிட்டதற்காக மன்னிப்பு கோருகிறோம். அவர்மீதான குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டோம். அவருக்குரிய நீதிமன்றச் செலவையும் போலீஸார் வழங்குவார்கள்.
நிஜாமுதீனை கைது செய்து எங்கள் பாதுகாப்பில் வைத்தமைக்கும், அவரிடம் விசாரணை நடத்தியமைக்கும் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அர்சகான் கவாஜாவிடம் விசாரணை நடந்து வருகிறது “ எனத் தெரிவித்தார்.