டிசம்பர் 19ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் ஏலத்தில் இம்முறை 11 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் ஆரம்பவிலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பெங்களுருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம், இம்முறை பிசிசிஐ தலைவர் கங்குலியின் முயற்சியால் முதன்முறையாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
வருகிற 19ஆம் தேதி துவங்கவிருக்கும் இந்த ஏலத்தில் வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர் சேர்த்து மொத்தம் 73 இடங்கள் நிரப்ப உள்ளன. இதற்க்கு 971 வீரர்கள் தங்களது பெயர்களை கொடுத்திருந்தனர். அதிலிருந்து 332 வீரர்கள் வடிகட்டப்பட்டு 19ஆம் தேதி நடக்கும் ஏலத்தின் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1½ கோடி, ரூ.2 கோடி போன்ற பகுதி வாரியாக பட்டியல் இடப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இலங்கையின் மேத்யூஸ் ஆகிய 7 வீரர்கள் அதிகபட்ச ஆரம்பவிலையான 2 கோடி ருபாய் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் விளையாடிராத வீரர்களுக்கு ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் இறுதி பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் சேலத்தை சேர்ந்த ஜி.பெரியசாமி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த டி.என்.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவர் ரூ.20 லட்சம் அடிப்படை விலை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சென்ற ஐபிஎல்-இல் ரூ.8.4 கோடிக்கு விலை போன சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆரம்பவிலை 20 லட்சம் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.
மேலும், சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக் கான் ஆகிய தமிழக வீரர்களும் இறுதிக்கட்ட ஏலப்பட்டியலில் உள்ளனர்.