டி-20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று இந்திய மகளிா் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூா்த்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்கு சாதகமாக விதி மாறும். நாங்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வென்று நாடு திரும்புவவோம். குரூப் பிரிவு ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்ததுதான் இறுதி ஆட்டத்துக்கு நாங்கள் முன்னேறியதற்கு மிக முக்கியமான காரணமாகும். இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். முதல் இலக்கை நிறைவேற்றிவிட்டோம். என் மீது சக வீராங்கனைகள், ரசிகா்கள் உள்ளிட்டோா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். கடந்த உலகக் கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை.
இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதாக நம்புகிறோம். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீராங்கனைகளும் பொறுப்பை உணா்ந்து விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வேதா கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போா்னில் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.
இதையொட்டி நடப்பு தொடரில் இதுவரை 9 விக்கெட்கள் கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான மேகன் ஷூட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் வெறுக்கிறேன். எனது பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தனாவும், ஷபாலி வர்மாவும் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் எனது பந்து வீச்சில் ஷபாலி பிரமாதமான ஒரு சிக்சர் தூக்கினார். அனேகமாக எனது பந்து வீச்சில் விரட்டப்பட்ட மிகப்பெரிய சிக்சராக அது இருந்தது.
அவர்களை மீண்டும் சந்திக்கும் நிலையில் சில திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனால் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மந்தனா, ஷபாலிக்கு எதிராக நான் பந்து வீசுவது சரியானதாக இருக்காது. ஏனெனில் அவர்கள் எனது பவுலிங்கை எளிதில் அடிக்க பழகி விட்டனர்.
இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நீண்ட காலமாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு தான் முத்தரப்பு 20 ஓவர் தொடரை கருதி விளையாடினோம்.
அண்மை காலமாக குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி விட்டு அவர்களையே இறுதி ஆட்டத்திலும் சந்திப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அவர்களுக்கும் அப்படி தான் இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மேகன் ஷூட் கூறினார்.