எத்தனையோ வீரர்கள் வரலாம் போகலாம் ஆனால் ஒரு சில வீரர்கள் மட்டுமே அணியில் நிலைபெற்று சூப்பர் ஸ்டார்களாக வர முடியும். அந்த வகையில் விராட் கோலி சிறு வயது முதலே சவாலான வீரர் என்பதை அவர் இந்திய அணிக்கு தேர்வான விதம் பற்றி வெங்சர்க்கார் விவரிப்பதிலிருந்து நாம் அறிய முடியும்.
இப்போது ஐபிஎல் கிரிக்கெட் இந்திய அணிக்குள் நுழைவதற்கான ஒரு எளிதான வழிமுறையாக உள்ளது, ஆனால் விராட் கோலி ஐபிஎல்-க்கு முந்தைய கிரிக்கெட் வீரர், அப்போது எமர்ஜிங் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட இந்திய அணி வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் தொடர்களுக்குச் செல்லும்.
2008-ம் ஆண்டில் அந்த அணியில் இடம்பெற்ற விராட் கோலி அதன் பிறகு நேரடியாக இந்திய அணி, அதுமுதல் அவர் திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக வெங்சர்க்கார் கூறியதாவது:
2008-ம் ஆண்டு நான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது ஆஸ்திரேலியாவில் எமர்ஜிங் அணி தொடரில் ஆடியது, அதற்காக அணித்தேர்வு செய்த போது அடுத்ததாக இந்திய அணிக்கு ஆடும் யு-23 வீரரை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். எனவே எமர்ஜிங் அணியில் விராட் கோலியைத் தேர்வு செய்தோம்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் 240-250 ரன்களை எடுத்தனர். விராட் கோலி தொடக்க வீரராக இறங்கி 123 நாட் அவுட் என்று சதமெடுத்தார். அப்போது அவரிடம் பாராட்டத்தகுந்த விஷயம் என்னவெனில் சதம் அடித்து முடித்த பிறகு கூட அணி வெற்றிபெறும் வரை கிரீசில் நின்றார். நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
அவரது இந்த அணுகுமுறை என்னை வெகுவாகக் கவர இந்தப்பையனை இந்திய அணிக்குள் நுழைக்க வேண்டும் என்று நினைத்தேன். மன ரீதியாக மிகவும் முதிர்ச்சியுள்ள வீரராக அப்போதே இருந்தார். மீதியெல்லாம் தெரிந்த கதை”என்றார் வெங்சர்க்கார்.
அந்தத் தொடரில் விராட் கோலி 5 இன்னிங்ஸ்களில் 204 ரன்களை எடுத்தார். சராசரி 51, ஆனால் ஷிகர் தவண் 6 மேட்ச்களில் 334 ரன்கள் எடுத்து அதிக ரன்களை எடுத்த வீரராக இருந்தார் என்பது வேறு ஒரு கதை.