மீண்டும் ஃபார்முக்கு வந்த சூரியகுமார், இஷான் கிஷன்.. வெங்கடேஷ் ஐயர் சதம் வீண்… கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரின் அபாரமான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 186 ரன்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே சிக்ஸர் மழைகளாக பொழிந்த வெங்கடேஷ் ஐயர் சதம் விளாசி, இந்த சீசனின் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

49 பந்துகளில் சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர்,  51 பந்துகளில் 104 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது கொல்கத்தா அணியினர்.

இந்த இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஓபனிங் செய்தனர். ரோகித் சர்மா 20 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 58 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

சூரியகுமார் யாதவ் கடந்த போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருந்ததை சற்றும் வெளிக்காட்டாதவாறு அதிரடியாக தொடங்கினார். இவருடன் சேர்ந்து திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்தது.

 

திலக் வர்மா 30 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். கடைசி வரை நின்ற டிம் டேவிட் 13 பந்துகளில் 24 ரன்கள் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.