பேட்ஸ்மேனுக்கு தண்ணி காட்டுவார் அந்த இந்திய பவுலர் – ஸ்டீவ் ஸ்மித் கூறியது இவரைத்தான்!
பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சூழலால் திணறடிக்க கூடிய இந்த இந்திய பவுலரை எதிர்கொள்வது சற்று கடினம் என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்து வருகிறார்.
ஒருவருட தடைக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய இவர் ஆஷஸ் தொடரில் 750 ரன்களுக்கும் அதிகமாக அடித்து வரலாற்று சாதனையிலும் இடம்பிடித்து தனது வருகையை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84 ஆகும்.
தலைசிறந்த சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் குறிப்பிட்ட சில நாடுகளின் மைதானத்தில் தனது பேட்டிங்கில் தடுமாறியுள்ளனர். ஆனால் ஸ்மித் சொந்தமண் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது; இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்.
அதுமட்டுமல்லாது பாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங், கூக்ளி என அனைத்து பவுலிங்கையும் திறமையாக கையாளக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், இந்திய சுழல்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை எதிர்கொள்வது சற்று கடினம் என அவரை புகழ்ந்துள்ளார்.
“இந்திய துணைக்கண்டத்தில் ஜடேஜாவின் பந்துவீச்சை எதிர்கொள்வது சற்றுக்கடினம். மிக துல்லியமான லைன் அண்ட் லெந்த்தில் வீசுவார். குறிப்பாக, பந்தில் பல வேரியேஷன்கள் காட்டக்கூடியவர். ஒரு பந்து வழுக்கிக்கொண்டு செல்லும், ஒரு பந்து திடீரென திரும்பும். ஆனால் அவரது கையசைவுகளை வைத்து அவரது பவுலிங்கை கணிக்க முடியாது. சரியான லெந்த்திலும், நல்ல வேரியேஷனுடனும் வீசுவதால் எளிதாக விக்கெட் வீழ்த்துகிறார்.
லெக் ஸ்பின்னர்கள் கூக்ளி வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். ஆனால் ஆஃப் ஸ்பின்னர்களை பொறுத்தமட்டில், அவர்கள் கையின் வேகத்தை மாற்றி வீசவேண்டும். பந்தின் வேகத்தை மட்டும் மாற்றி வீசுவதுடன், வேரியேஷன் காட்டுவது ஜடேஜாவின் பலம். இதனால், அவரை ஆடுவது கடினம்.” என கூறியுள்ளார் ஸ்மித்.