கர்நாடகா அணியை கதறவிட்ட தமிழக இளம் வீரர்கள்; அரையிறுதி சுற்றுக்குள் கால் பதித்தது தமிழ்நாடு அணி !!

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் காலிறுதி சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் மோதின.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்களும், ஷாருக் கான் 79 ரன்களும், சாய் கிஷோர் 61 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கர்நாடகா அணியில் ஸ்ரீனிவாஸ் (43), அபினவ் மனோகர் (34), கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் (29), ரோஹன் கதாம் (24) மற்றும் கரியப்பா (10) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 39 ஓவர் முடிவில் வெறும் 203 ரன்கள் மட்டுமே எடுத்த கர்நாடகா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

கர்நாடகா அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும், வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.